சென்னை: தமிழகம் முழுவதும் பூத் ஸ்லீப் வழங்கும் பணி 100 சதவிகிதம் நிறைவு பெற்றுள்ளதாகவும், தமிழகத்தில் தேர்தல் பணிக்காகக் கூடுதலாக 10 கம்பெனி சி.ஆர்.பி.எப் (Central Reserve Police Force) வீரர்களைத் தமிழக டிஜிபி கேட்டுள்ளதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "17ஆம் தேதிக்குள் தபால் வாக்குகள் தொடர்பான அனைத்து பணிகளும் நிறைவு பெறும். தமிழகத்தைச் சேர்ந்த 71 ஆயிரம் ராணுவ வீரர்கள், துணை ராணுவ வீரர்கள் தபால் மூலமாக வாக்களிக்க உள்ளனர். இவர்கள் தங்களின் வாக்குச் சீட்டுகளைத் தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும்.
சர்வீஸ் வாக்காளர்கள் என்று அழைக்கப்படும் ராணுவ வீரர்கள் அனைவரும், வரும் ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணிக்கு முன்னதாக, தங்களின் வாக்குச் சீட்டுகள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வந்து சேரும் வகையில் தபால் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். வாக்குப்பதிவு அன்று அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் Alphabet வரிசையில் வாக்காளர் பட்டியல் வழங்கப்படும்" எனத் தெரிவித்தார்.
மேலும், "காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பறக்கும் படையினரால், ஆயிரத்து 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தங்கம், 'Brinks India private limited' நிறுவனத்திற்குச் சொந்தமானது என முதற்கட்ட விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.
தற்போது பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். தமிழகத்தில் தேர்தல் பணிக்காகக் கூடுதலாக 10 கம்பெனி சி.ஆர்.பி.எப் வீரர்களைத் தமிழக டிஜிபி கேட்டுள்ளார். ஏற்கனவே 190 கம்பெனி சி.ஆர்.பி.எப் வீரர்கள் தமிழகத்திற்கு வந்துள்ள நிலையில், கூடுதல் வீரர்கள் வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளோம்.
வாக்குப்பதிவு நாள் அன்று விளம்பரம் அளிக்க 17ஆம் தேதிக்கு முன்பாக அனுமதி பெற வேண்டும். 17ஆம் தேதிக்கு முன்பாக தேர்தல் ஊடக சான்று குழுவினரிடம் விளம்பரங்களைச் சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரே நாடு ஒரே தேர்தல்.. பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு.. முக்கிய வாக்குறுதிகள் என்னென்ன? - BJP Manifesto 2024