ஐதராபாத்: கான்பூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அதேபோல் முதல் நாள் ஆட்டமும் போதிய வெளிச்சமின்மை மற்றும் மழை காரணமாக ஏறத்தாழ 55 ஓவர்கள் வீசப்படாமல் கைவிடப்பட்டது.
தற்போது வங்கதேச அணி 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் குவித்துள்ளது. இன்னும் மூன்று நாட்களே உள்ளன. ஒருவேளை மீதமுள்ள மூன்று நாட்களில் இரு அணிகளும் விளையாடி போட்டி இந்தியா வெற்றி பெற்றால் தொடரை 2-க்கு 0 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றும். அதேநேரம் இரண்டாவது டெஸ்ட் ரத்து அல்லது கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டால், இந்தியா 1-க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்:
ஆனால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவதில் சில சிக்கல்களை உருவாகும். 2023 -25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தற்போது இந்தியா 10 வெற்றி, இரண்டு தோல்விகளுடன் 86 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் 12 ஆட்டங்களில் விளையாடி அதில் 8ல் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா உள்ளது. வங்கதேச தொடரை அடுத்து இந்தியாவுக்கு 8 டெஸ்ட் போட்டிகளே கைவசம் உள்ளன. இதில் 3 டெஸ்ட் போட்டிகள் நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், மீதமுள்ள 5 டெஸ்ட் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் உள்ளது.
நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா:
வங்கதேச தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றினால் நேரடியாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறலாம். அதன்பின் அடுத்துள்ள நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான 8 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஏதேனும் 3 ஆட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றால் கூட இந்திய அணிக்கு போதுமானது.
ஒருவேளை வங்கதேச தொடர் 1-க்கு 0 என்ற கணக்கில் முடியும் போது, இந்திய அணி அடுத்து உள்ள 8 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகளிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குறைந்தது 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
அதேநேரம், இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முடிவுகளும் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றக் கூடும் என்பதால் பொறுத்து இருந்து தான் பார்க்க முடியும்.
இதையும் படிங்க: டி20யில் புது வரலாறு படைத்த நிகோலஸ் பூரன்! பாகிஸ்தான் வீரரை முந்தி புது சாதனை! - Nicholas Pooran Record