ஐதராபாத்: வங்கதேசம் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது.
இதையடுத்து முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி நேற்று (செப்.8) அறிவிக்கப்பட்டது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணியில் பல முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். 21 மாதங்களுக்கு பிறகு விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார்.
மேலும், தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யபட்டுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், நீண்ட நாட்களுக்கு பின் கே.எல் ராகுல் அணியில் இடம் பிடித்துள்ளார். அதேநேரம், ஸ்ரேயாஸ் ஐயருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில், சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியின் டிக்கெட் விற்பனை குறித்த விவரம் வெளியாகி உள்ளது.
இன்று காலை முதல் இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி உள்ளது. ரசிகர்கள் insider.in என்ற இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. டிக்கெட்டின் தொடக்க விலை ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் விலை விவரம் வருமாறு:
வ.எண் | கேலரி ஸ்டாண்ட் பெயர் | டிக்கெட் விலை |
1 | C, D & E Lower Tier | ₹1,000 |
2 | I, J & K Lower Tier | ₹2,000 |
3 | I, J & K Upper Tier | ₹1,250 |
4 | KMK Terrace | ₹5,000 |
5 | C, D & E (A/c) Hospitality Box | ₹10,000 |
6 | J (A/c) Hospitality Box | ₹15,000 |
தொடர்ந்து இந்தியா - வங்கதேசம் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 27ஆம் தேதி உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் தொடங்குகிறது. இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கீழ் வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் தற்போது இந்தியா முதலிடத்தில் உள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான தொடரை கைப்பற்றி தரவரிசையில் இந்தியா முதலிடத்தை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய வேகத்தில் வங்கதேசம் உள்ளதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Viral Photo of Neeraj: வெள்ளை சட்டையில் சாக்லேட் பாய் நீரஜ் சோப்ரா! வைரல் போட்டோஸ்! - Neeraj Chopra