சென்னை: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்.28) இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 46வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
டாஸ் வென்ற சன்ரைசஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்து உள்ளார். சென்னை அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 4ல் வெற்றியும், 4 போடிகளில் தோல்வியும் கண்டு புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் நீடிக்கிறது. கடைசியாக விளையாடிய இரண்டு போட்டியிலும் சென்னை அணி தோல்வி அடைந்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஏற்கனவே ஐதராபாத் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியிலும் சென்னை அணி தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.
அதற்கு பழிவாங்கும் நோக்கிலும், ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க வேண்டும் என்ற முனைப்பிலும் சென்னை அணி இன்று களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் இனி வரும் ஆட்டங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றில் தொடர முடியும் என்ற கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.
அதேநேரம் ஐதராபாத் அணி நடப்பு சீசனில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அசால்ட்டாக 200 ரன்களுக்கு மேல் அந்த அணி குவித்து வருகிறது. இருப்பினும் பெங்களூரு அணிக்கு எதிரான கடை ஆட்டத்தில் தோல்வியை தழுவியதால் அந்த அணி சற்று பின்டடைவை எதிர்கொண்டு உள்ளது.
இருப்பினும், இன்றைய ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி பழைய பார்முக்கு திரும்ப ஐதராபாத் அணி முயற்சிக்கும். அதேநேரம் உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் சென்னையை எதிர்கொள்வது ஐதராபாத்துக்கு கடினமான ஒன்று தான். வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக முயற்சிப்பார்கள் என்பதால் ஆடத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
போட்டிக்கான இரு அணி வீரர்கள் பட்டியல்:
சென்னை சூப்பர் கிங்ஸ்: அஜிங்க்யா ரஹானே, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டேரில் மிட்செல், மொயீன் அலி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் ரஹ்மான், மதீஷா பத்திரனா.
சன்ரைசஸ் ஐதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், எய்டன் மார்க்ராம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் ரெட்டி, அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், நடராஜன்.
இதையும் படிங்க: ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் சிக்கிய பாகிஸ்தான் படகு! 14 பேர் கைது! - Gujarat Pakistan Drug Boat Seized