தேனி: போடிநாயக்கனூர் கூடைப்பந்தாட்ட கழகம் சார்பில் மின்னொளியில் நடைபெறும் மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் போடிநாயக்கனூரில் சுமார் 5 நாட்கள் நடைபெற்றது. இந்த கூடைப்பந்தாட்ட போட்டியில், தமிழ்நாடு மாநில அளவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கூடைப்பந்தாட்ட அணியினர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக ஆடவர் அணியில் சென்னையைச் சேர்ந்த வேல்ஸ் பல்கலைக்கழக மாணவர்கள், எஸ்ஆர்எம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்வி நிறுவன மாணவர்கள், எத்திராஜ் கல்லூரியில் இருந்து மாணவிகள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 24 ஆடவர் அணியினரும், 4 மகளிர் விளையாட்டு அணியினரும் இந்த கூடைப்பந்தாட்ட போட்டியில் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்று வெற்றி பெறும் ஆடவர் அணிக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் பரிசுக் கோப்பையும், 2வது பரிசு ரூ.30 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பை அறிவிக்கப்பட்டிருந்தது. மகளிர் அணியினருக்கு முதல் பரிசு ரூ.20 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பையும், 2வது பரிசு ரூ.15 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பையும் அறிவிக்கப்பட்டது.
ஆடவர் அணியில் நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டிகளில் 4 அணிகள் லீக் சுற்றில் விளையாடி, சென்னை எஸ்ஆர்எம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அணியினர் மற்றும் சென்னையைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் அகாடமி ஆப் தமிழ்நாடு அணியினரும் இறுதிப் போட்டியில் களமிறங்கினர்.
பரபரப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், எஸ்ஆர்எம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி அணியினர் போராடி வெற்றி பெற்று, ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் முதல் பரிசுக்கான கோப்பையையும் தட்டிச் சென்றனர். எதிர்த்து விளையாடிய எஸ்டிஏடி அணியினர் ஓரிரு புள்ளிகளில் வெற்றியை இழந்து, இரண்டாவது பரிசு தொகை ரூ.30 ஆயிரம் மற்றும் பரிசுக் கோப்பையை வென்றனர்.
மகளிர் அணியில் சென்னையைச் சேர்ந்த ரைசிங் ஸ்டார் கூடைப்பந்தாட்ட அணியினர் முதல் பரிசு ரூபாய் 20 ஆயிரம் மற்றும் பரிசுக் கோப்பையை தட்டித் தூக்கினர். எதிர்த்து விளையாடிய சென்னையைச் சேர்ந்த எஸ்டிசி அணியினர் இரண்டாவது பரிசு தொகை ரூபாய் 15 ஆயிரம் மற்றும் பரிசுக் கோப்பை பெற்றனர்.
இந்தப் போட்டியில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனின் பேரன் செந்தில் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, அனைவருக்கும் பரிசுகளை வழங்கினார். மேலும், போடிநாயக்கனூர் கூடைப்பந்தாட்ட கழகம் விளையாட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தது.