துபாய்: 9வது மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (அக்.4) மாலை 3.30 மணிக்கு துபாயில் நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியில் ஸ்டாபானி டெய்லர் மட்டும் 44 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
A confident 10-wicket win to start South Africa's Women's #T20WorldCup 2024 👊#SAvWI #WhateverItTakes
— T20 World Cup (@T20WorldCup) October 4, 2024
📝: https://t.co/CRobr4IkPU pic.twitter.com/9xnHJgmtjx
துபாய் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு நன்றாக எடுபட்டது. தென் ஆப்பிரிக்க வீராங்கனை நோன்குலுலேகோ ம்லபா அதிரடியாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரைத் தொடர்ந்து மரிசான் கேப் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். தொடர்ந்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தென் ஆப்பிரிக்க மகளிர் களமிறங்கினர்.
வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை அசால்ட்டாக எதிர்கொண்ட தென் ஆப்பிரிக்க தொடக்க ஜோடி அபாரமாக விளையாடி மைதானத்தில் ருத்ரதாண்டவம் ஆடியது. தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஜோடி கேப்டன் லாரா வால்வார்ட் மற்றும் தசிம் பிரிட்ஸ், வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர்.
அதிரடியாக விளையாடிய இருவரும் 17வது ஓவர்களில் வெற்றியை தேடித் தந்தனர். 17.5 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 119 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபாரமாக விளையாடிய லாரா வால்வார்ட் (59 ரன்) மற்றும் தசிம் பிரிட்ஸ் (57 ரன்) அரைசதம் விளாசினர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் மொத்தம் 8 வீராங்கனைகளை பயன்படுத்தி பார்த்தும் இந்த ஜோடி பிரிக்க முடியவில்லை.
இதையும் படிங்க: வீரர்களுக்கு 4 மாதம் சம்பளம் பாக்கி: கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! - No Salary for Pakistan Cricketers