கொழும்பு: இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஒரு டெஸ்ட் போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, கொழும்புவில் நேற்று (பிப்.02) தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி, 198 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி தரப்பில் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், அசித்த பெர்னாண்டோ மற்றும் பிரபாத் ஜெயசூரிய தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இலங்கை அணி தரப்பில் நிஷான் மதுஷங்கா மற்றும் திமுத் கருணாரத்னே கூட்டணி தொடக்க வீரர்களாகக் களமிறங்கி ரன்களை குவித்தனர். நிஷான் மதுஷங்கா 37 ரன்கள் எடுத்து இருந்தபோது, நவீத் சத்ரன் வீசிய பந்தில் நூர் அலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அதன் பின்னர் களமிறங்கிய குசல் மெண்டிஸ் 10 ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் நிலைத்து ஆடிய ஏஞ்சலோ மேத்யூஸ் 147 ரன்களுடனும், தினேஷ் சண்டிமால் 101 ரன்களுடனும் களத்தில் நின்று ஆடி வருகின்றனர். இதனால் இலங்கை அணி 171 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
இதற்கிடையில், போட்டியின் 47.3வது ஓவரின்போது உடும்பு ஒன்று மைதானத்திற்குள் நுழைந்தது. இதனால் போட்டி சிறிது நேரத்திற்கு நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து மைதான ஊழியர்கள், உடும்பை மைதானத்தில் இருந்து அகற்ற முயன்றனர். பின்னர் மைதானத்தில் இருந்து உடும்பு வெளியேறியது.
இதையும் படிங்க: இண்டிகோ விமான ஊழியர்களால் கசப்பான நிகழ்வு - பாரா விளையாட்டு வீராங்கனை சுவர்னா ராஜ் புகார்!