பல்லகெலே: இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான டி20 போட்டிகள் நாளை(ஜூலை 27) தொடங்கவுள்ளது. இத்தொடரிலிருந்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராகக் கவுதம் கம்பீர் செயல்படவுள்ளார். மேலும் இந்திய டி20 அணியை சூர்யகுமார் யாதவ் தலைமை தாங்குகிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுப்மன் கில், "இதுவரை நானும் கம்பீரும் இரண்டு வலைப்பயிற்சிகளில் மட்டுமே ஒன்றாக இணைந்து செயல்பட்டோம். குறிப்பாகக் கவுதம் கம்பீருடன் இணைந்து நான் வேலை செய்வது இதுவே முதல் முறையாகும். ஆனால் இந்த 2 வலைப் பயிற்சிகளிலுமே அவர் என்னிடம் கூறிய தகவல்களும் அவரது நோக்கமும் மிகவும் தெளிவாக இருந்தது. ஒவ்வொரு வீரரும் என்ன செய்ய வேண்டும் என்பதில் அவர் மிகவும் தெளிவாக உள்ளார். அதேபோல் சூர்யகுமார் யாதவ் மற்றும் கவுதம் கம்பீர் ஆகிய இருவருடனும் பணியாற்றி உள்ளேன். இருவரின் மனநிலையும் ஒரே மாதிரியானதாகத் தான் இருக்கும்.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் என் செயல்பாடு சிறப்பானதாக இல்லை. இந்திய அணி அடுத்த டி20 உலகக்கோப்பைக்குள் 30லிருந்து 40 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் எனது நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்தி என் பேட்டிங் தரத்தை உயர்த்துவேன்.
அடுத்ததாக தொடர்ந்து 10 டெஸ்ட் போட்டிகளில் இந்திய விளையாடவுள்ளது. அதில் பங்கேற்பதற்காக நான் ஆர்வமாக உள்ளேன். அதிலும் குறிப்பாக ஐந்து போட்டிகளை ஆஸ்திரேலியாவில் விளையாட இருக்கிறோம்.அதன் பிறகு சாம்பியன் டிராபியில் விளையாட உற்சாகமாக இருக்கிறேன். தற்போது இலங்கையுடன் நாங்கள் பங்கேற்கவுள்ள 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதற்கு முன்னாள் மிக முக்கியமானதாக இருக்கும்.
என்னுடன் துவக்கத்தில் களமிறங்கும் ஜெய்ஸ்வாலும் நானும் மகிழ்ச்சியாக பேட்டிங் செய்கிறோம். குறிப்பாக நான் வலது கை ஆட்டக்காரராகவும் அவர் இடது கை ஆட்டக்காரராகவும் இருப்பதால் எங்களுக்குக் கூடுதல் பலமாக இருக்கிறது. நாங்கள் இதுவரை இரண்டு முறை 150 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை அமைத்துள்ளோம். ஆகவே எங்களுக்குள் புரிதல் நன்றாகவே உள்ளது.
இத்தருணத்தில் இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக நியமனம் ஆகிய அபிஷேக் நாயருக்கும் பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் அவருடன் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியில் விளையாடினேன். அவர் மைதானத்தில் அதிக உழைப்பை வெளிப்படுத்துவார்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆரம்பமே அட்டகாசம்.. வில்வித்தையில் காலிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி!