சென்னை: உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 33-ஆவது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வரும் 26-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 பிரிவுகளில் 117 இந்திய வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். குறிப்பாக டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சரத் கமல் பங்கேற்கவுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமல்(40), நுங்கம்பாக்கம் பிஎஸ்பிபி பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்து லயோலா கல்லூரியில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார். இவர் தனது 4 வயதில் இருந்தே டேபிள் டென்னிஸ் விளையாட்டை விளையாடத் தொடங்கியுள்ளார். இவரின் தந்தை மற்றும் மாமா டேபிள் டென்னிஸ் வீரராக இருந்ததால் இவரும் 4 வயதிலேயே டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார்.
பள்ளிப்பருவத்தில் இருந்தே டேபிள் டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கிய சரத் கமல், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசியப் போட்டிகளில் முன்னணி வீரர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். தேசிய அளவில் பட்டம் பெற்றதால் அனைவரது பார்வையும் அவர் மேல் விழுந்தது. இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிகளவில் பங்கேற்கத் தொடங்கி இந்தியாவின் டேபிள் டென்னிஸ் முகமாக சரத் கமல் பார்க்கப்படுகிறார்.
தேசிய அளவில் 10 முறை சாம்பியன்: 2002 ஆம் ஆண்டு முதல் டேபிள் டென்னிஸ் போட்டியில் மிகச்சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கு மேலாக டேபிள் டென்னிஸ் விளையாடி வரும் சரத் கமல், காமன்வெல்த் போட்டி, ஆசிய போட்டிகளில் அதிக பதக்கங்களை வென்ற டேபிள் டென்னிஸ் வீரராக திகழ்ந்து வருகிறார். தேசிய அளவில் பத்து முறை சீனியர் தேசிய சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் சரத் கமல், இச்சாதனையை தற்போது வரை யாரும் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில போட்டிகளில் தொடர் வெற்றிக்கு பிறகு, சரத் கமல் 2002 ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் வெண்கலப் பதக்கத்தையும், குழுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். இவ்வாறு தனது தேசிய பதக்க கணக்கைத் தொடங்கினார்.
இதனையடுத்து 2003 ஆம் ஆண்டில் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் சரத் கமல் முதல் முறையாக தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றார். அடுத்ததாக 2004ல் மீண்டும் தேசிய போட்டியில் வென்ற சரத் கமல் தொடர்ந்து 2006 முதல் 2010 வரை, ஐந்து முறை சீனியர் நேஷனல்களில் பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.
2011ஆண்டு குழு போட்டியில் தங்கம் வென்ற அவர், அதன் பின் வந்த தேசிய போட்டிகளில் தோல்விகளை சந்திக்க தொடங்கினார். பின்னர் தனது கடின பயிற்சியின் மூலம் மீண்டு வந்த சரத் கமல், 2018-2019 ஆண்டு நடந்த தேசிய போட்டியில் தமிழகத்தைச் சார்ந்த சக வீரரான சத்தியன் ஞானசேகரனை வீழ்த்தி 9வது தேசிய பட்டத்தை வென்ற முதல் வீரரானார்.
இதன்மூலம் 8 முறை தேசிய பட்டத்தை வென்றிருந்த கமலேஷ் மேத்தாவின் சாதனையை முறியடித்தார். பின்னர் மீண்டும் 2021-2022 தேசியப் போட்டியில் மீண்டும் சத்தியன் ஞானசேகரனை வீழ்த்தி சரத் கமல் தனது 10வது பட்டத்தை வென்று டேபிள் டென்னிஸ் போட்டியில் யாரும் நெருங்க முடியாத உயரத்திற்குச் சென்றார்.
காமன்வெல்த் போட்டிகளில் அசத்தல்: தேசிய அளவில் பல சாதனைகளைப் பெற்றிருந்த சரத் கமல், சர்வதேச அளவிலும் பல சாதனைகளைச் செய்திருக்கிறார். 2006 ஆம் ஆண்டு மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் குழு போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்ததோடு, தனி நபர் பிரிவிலும் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இதனையடுத்து 2010 ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கம், 2018 கோல்ட் கோஸ்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கத்தையும், ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் சரத் கமல், 60 சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். அதில் காமன்வெல்த் போட்டிகளில் 7 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு பிரிவில் பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய விளையாட்டில் 2 வெண்கலம் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2 வெண்கலமும் வென்றுள்ளார்.
மேலும் 10 முறை தேசிய சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். 2007 ஆம் ஆண்டு வட கொரியாவின் பியாங்யாங்கில் நடைபெற்ற போட்டியில் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். உலக டேபிள் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் அதிக பட்சமாக 30வது இடம் பெற்றது அவரது சிறந்த தரவரிசை ஆகும்.
கேல் ரத்னா விருது அறிவிப்பு: டேபிள் டென்னிஸ் துறையில் அவரது சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், இந்திய அரசு அவருக்கு 2004ல் அர்ஜுனா விருதும், 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 20022 ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருதும் வழங்கி உள்ளது.
5வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்பு: சரத் கமல் 2004, 2008 2016 மற்றும் 2020ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவிற்காகப் பங்கேற்று தற்போது 5-ஆவது ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கத் தேர்வாகியுள்ளார். இதன்மூலம் உலகளவில் 5 ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற 200 வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.
இவ்வாறு இந்தியாவிற்காகச் சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் சரத் கமல், இந்த ஆண்டு பாரிஸில் நடக்கவுள்ள ஒலிம்பிக் தொடரில் பங்கேற்று, தொடக்க நாளில் தேசியக் கொடியை ஏந்திச் சென்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்கவுள்ளார்.
இதையும் படிங்க: இன்னும் சில நாட்களில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி 2024.. முன்னேற்பாடுகள் என்னென்ன?