சென்னை: உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இன்று முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் பிரிவில் இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல் பங்கேற்கவுள்ளார். மேலும், ஒலிம்பிக் தொடக்கவிழா அணிவகுப்பில் இந்திய தேசியக்கொடியை ஏந்திச் சென்று பெருமை சேர்க்கவுள்ளார். இவர் 2002ஆம் ஆண்டு முதல் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் இந்தியாவிற்காக தனது சிறந்த பங்களிப்பினை அளித்து வருகிறார்.
10 முறை தேசிய சாம்பியன்: இந்தியாவின் சார்பில் ஆசியப் போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களைக் குவித்துள்ளார். அதிலும் குறிப்பாக, தேசிய அளவில் 10 முறை சீனியர் தேசிய சாம்பியன் பட்டத்தை வாகை சூடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். காமன்வெல்த் போட்டிகளில் 2006ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்ததோடு, தனிப்பிரிவிலும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
காமன்வெல்த் போட்டியில் பதக்க அறுவடை: 2010ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். 2018ஆம் ஆண்டு கோல்ட் கோஸ்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் ஆண்கள் அணி பிரிவில் தங்கப் பதக்கத்தையும், ஆடவர் இரட்டையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் மற்றும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்று பதக்க அறுவடையைத் தொடர்ந்தார்.
5 முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்பு: 20 ஆண்டுகளுக்கு மேலாக டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் சரத் கமல், 60 சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். அதில் காமன்வெல்த் போட்டிகளில் 7 தங்கம், 3 வெள்ளி மற்றும் 3 வெண்கலம் என ஒற்றையர், இரட்டையர் மற்றும் குழு பிரிவில் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார். இதைத் தவிர, ஆசிய விளையாட்டில் 2 வெண்கலம் மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2 வெண்கலமும் வென்றுள்ளார். இவ்வாறு இந்தியாவின் சார்பில் டேபிள் டென்னிஸ் போட்டியில் தனது சிறப்பான பங்களிப்பினை அளித்துவரும் சரத் கமல் ஒலிம்பிக் தொடரில் 5வது முறையாக பங்கேற்கவுள்ளார்.
இந்திய தேசியக் கொடியை ஏந்திச் செல்வது பெருமை: இந்நிலையில், சரத் கமல் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளது குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, "பாரிஸ் ஒலிம்பிக் என்னுடைய 5வது ஒலிம்பிக் தொடராகும். டேபிள் டென்னிஸ் போட்டியில் குழுவாக விளையாடுவதற்காக நம் அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதுவரை கலப்பு மற்றும் தனிநபர் பிரிவில் மட்டுமே விளையாடி உள்ளோம். குழுவாக விளையாடுவது இதுவே முதல்முறையாகும்.
பதக்கத்தோடு திரும்புவோம்: பாரிஸ் ஒலிம்பிக்கில் தொடக்க விழா அணிவகுப்பில் இந்தியாவின் தேசியக் கொடியை ஏந்திச் செல்வது எனக்கு மட்டுமல்லாமல், உலகத்தில் உள்ள ஒவ்வொரு டென்னிஸ் வீரர்களுக்கும் பெருமைமிக்க தருணமாக இருக்கும். அந்நாளுக்காக ஆர்வமாக காத்திருக்கிறேன். இந்த ஒலிம்பிக் போட்டியில் எங்கள் குழுவில் இருந்து ஒரு பதக்கமாவது வெல்ல வேண்டும் என்ற ஆசை உள்ளது. கூடிய விரைவில் பதக்கத்தோடு திரும்புவோம்.
நான் என்னுடைய நான்கு வயதில் டேபிள் டென்னிஸ் விளையாட ஆரம்பித்தேன். என்னுடைய வெற்றிக்கு எனது பள்ளி தான் முழுமையான காரணம். அதன் ஆதரவு இல்லாமல் என்னால் இவ்வளவு தூரம் முன்னேறி இருக்க முடியாது. நம் நாட்டில் விளையாட்டில் திறமையானவர்கள் அதிக அளவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு சிறுவயதிலிருந்தே முறையான பயிற்சி அளித்து வந்தால் அவர்களாலும் கண்டிப்பாக சாதிக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆரம்பமே அதிரடி..ஒலிம்பிக் வில்வித்தை போட்டி..காலிறுதியில் இந்திய ஆடவர் அணி!