ஐதராபாத்: வங்கதேச அணி தற்போது பாகிஸ்தான் மண்ணில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே தற்போது முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி பின்னலாடை தொழிற்சாலை ஊழியர் எம்டி ரூபல் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஷகிப் அல் ஹசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிமுறைப்படி, கிரிக்கெட் வீரர் ஒருவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அவரை மைதானத்திற்குள் விளையாட அனுமதிக்கக் கூடாது. இருப்பினும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஷகிப் அல் ஹசனை, பாகிஸ்தானுக்கு அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
அண்மையில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்த நிலையில், வங்கதேச கிரிக்கெட் வாரியம் செயல்முறை நடவடிக்கைகளில் ஈடுபட அதிக கால தாமதத்தை எடுத்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது. ஷகிப் அல் ஹசன் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள போதிலும், அதை மறைத்து பாகிஸ்தான் கிரிக்கெட் தொடருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பாகிஸ்தானில் விளையாடி வரும் ஷகிப் அல் ஹசனுக்கு, வங்கதேச கிரிக்கெட் வாரியம் சட்டநடவடிக்கைகான நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஷகிப் அல் ஹசனை நாடு திரும்புமாறும், போலீஸ் விசாரணையில் ஈடுபடுமாறும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இருப்பினும், எத்தனை நாட்களில் ஷகிப் அல் ஹசன் நாடு திரும்ப வேண்டும் என்பது குறித்து தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நிறைவடைந்த பின்னரே ஷகிப் அல் ஹசன் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னலாடை தொழிலாளி கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, ஷகீப் அல் ஹசன் உள்ளிட்ட 156 அடையாளம் தெரிந்த நபர்கள் மீதும் 400 முதல் 500 அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் ஷகிப் அல் ஹசன், முதல் இன்னிங்சில் 27 ஓவர் பந்துவீசி 100 ரன்கள் வழங்கி உள்ளார். மேலும் பேட்டிங்கில் 15 ரன்கள் மட்டுமே குவித்து உள்ளார் ஷகிப் அல் ஹசன்.
இதையும் படிங்க: அடுத்த பிசிசிஐ செயலாளர் யார்? ஒரு பதவிக்கு மூன்று பேர் கடும் போட்டி! யார் அது? - who is Next BCCI Secretary