ஐதராபாத்: இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. டர்பனில் நேற்று (நவ.8) நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி எய்டன் மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில், முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (107 ரன்) அபாரமாக விளையாடி சதம் விளாசினார். மேலும், இந்திய அணிக்காக அடுத்தடுத்த ஆட்டங்களில் சதம் விளாசிய இந்திய வீரர் என்ற மைல்கல்லையும் சாம்சன் படைத்தார்.
இந்நிலையில், சஞ்சு சாம்சனின் 10 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை மூன்று இந்திய கேப்டன் சீரழித்துவிட்டதாக அவரது தந்தை பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். இது குறித்து தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்த சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத், எம்.எஸ். தோனி, விராட் கோலி, ராகுல் டிராவிட் ஆகியோர் சஞ்சு சாம்சனின் 10 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை சீரழித்ததாக தெரிவித்தார்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளாக உண்மையான விளையாட்டு வீரர்களை அவர் தேர்வு செய்யவில்லை என்றும் அவர்கள் எவ்வளவு காயப்படுத்துகிறார்களோ, அதற்கு அதிகமாக தன் மகன் தற்போது முன்னேறி உள்ளார் என்றார். இழந்த பத்து வருடங்கள் மீண்டும் கிடைக்கும் என நம்புவதாகவும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
அதேநேரம், முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் மீதும் சாம்சன் விஸ்வநாத் குற்றச்சாட்டுகளை முன்வைத்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஸ்ரீகாந்த் இந்தியாவுக்காக என்ன விளையாடினார் என்று தெரியவில்லை, வங்கதேசத்துக்கு எதிராக சதம் அடித்ததற்காக ஸ்ரீகாந்த் தன் மகனை கேலி செய்ததாகவும், அவர் மனதுக்குள் பகையுடன் நடந்து கொள்வதாகவும் சாம்சன் விஸ்வநாத் குற்றம் சாட்டினார்.
இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்த சஞ்சு சாம்சனின் தந்தை, தனது மகன் அடித்த இரண்டு சதங்களையும் அவர்களுக்கு அர்ப்பணிப்பதாக கூறினார்.
இதையும் படிங்க: Watch: அட வாப்பா.. ஒரு போட்டோ தான கேக்குறன்... விராட் கோலியிடம் பெண் ரசிகை அட்ராசிட்டி!