பல்லேகலே: இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரை 3-க்கும் 0 என்ற கணக்கில் முழுமையாக இழந்து ஒயிட் வாஷ் ஆனது இலங்கை அணி. பல்லேகலேவில் நேற்று (ஜூலை.30) நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் இருந்த இலங்கை அணி, திடீரென மளமளவென விக்கெட்டுகளை இழந்தது.
முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் விளையாடிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 110 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நல்ல நிலையில் இருந்தது. ஆனால் கடைசி நான்கு ஓவர்களில் இலங்கை அணி படுகுழியில் விழுந்தது.
28 பந்துகளில் 28 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்கில் இருந்த இலங்கை அணி அடுத்த 22 ரன்களுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. ஒட்டுமொத்தமாக 30 ரன்களை எடுப்பதற்குள் இலங்கை அணி 9 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்நிலையில், சொந்த மண்ணில் இலங்கை அணி கண்ட தோல்வி ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரம் முதல் முறையாக அமைந்து உள்ள சூர்யகுமார் யாதவ் - கவுதம் கம்பீர் கூட்டணியில் இந்திய அணிக்கு வெளிநாட்டு மண்ணில் கிடைத்த மிகப் பெறிய வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சனத் ஜெயசூர்யா பயிற்சித் தலைமையின் கீழ் முதல் முறையாக களமிறங்கிய இலங்கை அணிக்கு இது பேரிடியாகும்.
2024 டி20 உலக கோப்பை தோல்வியை அடுத்து இலங்கை அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பதவி விலகினார். இதையடுத்து சனத் ஜெயசூர்யா இலங்கை அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பயிற்சியாளராக சனத் ஜெயசூர்யாவுக்கு போதிய அளவில் அனுபவம் இல்லாத போதிலும், சர்வதேச கிரிக்கெட்டில் அவரது விளையாட்டின் மூலம் பெற்ற அனுபவங்களை வீரர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது அணி வலுப்பெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் விரும்பியது.
அதேநேரம் கடந்த ஜூன் மாதம் கிறிஸ் சில்வர்வுட் பதவி விலகிய பின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான அறிவிப்பையும் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஆஷ்லே டி சில்வே வெளியிட்டுள்ளார். முன்னதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக கடந்த 2019ஆம் ஆண்டு சனத் ஜெயசூர்யா இரண்டு ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டு இருந்தார்.
அவரது தடைக்காலம் அண்மையில் நிறைவு பெற்றதை அடுத்து அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இலங்கை அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அதன்பின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் பதவி விலகியதை தொடர்ந்து தற்போது இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
90களில் இலங்கை அணியில் நட்சத்திர வீரராக வலம் வந்த ஜெயசூர்யா, ஒயிட் பால் கிரிக்கெட்டில் இலங்கை அணியின் முக்கிய தூணாக விளங்கினார். ஆக்ரோஷமான ஆட்டம், துரிதமாக ரன் சேகரிப்பது உள்ளிட்ட திறன்கள் கிரிக்கெட் ரசிகர்களை ஜெயசூர்யா வெகுவாக கவர்ந்தார். ஒருநாள் கிரிக்கெட்டில் 5வது அதிகபட்ச ரன் குவித்த வீரர் என்ற சாதனை ஜெயசூர்யாவிடமே இன்னும் உள்ளது.
ஒருநாள் கிரிக்கெட்டில் 323 ஆட்டங்களில் விளையாடி 13 ஆயிரத்து 430 ரன்கள் குவித்து உள்ளார். மேலும் 110 டெஸ்ட் மற்றும் 31 டி20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ள ஜெயசூர்யா அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் 12வது இடத்தில் உள்ளார். இது தவிர நீண்ட நாட்கள் கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற சிறப்பு ஜெயசூர்யாவுக்கு உண்டு.
21 ஆண்டுகள் 184 நாட்கள் கிரிக்கெட் விளையாடி அதிக வருடங்கள் கிரிக்கெட் விளையாடிய வீரர்கள் பட்டியலில் ஜெயசூர்யா 2வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 22 ஆண்டுகள் 91 நாட்கள் விளையாட்டில், கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக நாட்கள் கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: கர்ப்பத்திலும் நாட்டுக்காக விளையாட்டு.. எகிப்து வாள்வீச்சு வீராங்கனையின் நெகிழ்ச்சி பதிவு! - Paris Olympics 2024