மும்பை: 17வது ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடி வருகிறது. மும்பையில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. மும்பை அணிக்கு முதல் ஓவரை ஆல் ரவுண்டர் நபி வீசினார். அவர் வீசிய ஓவரில் ஆர்சிபி அணி 4 ரன்கள் எடுத்தது.
கோயட்சி வீசிய இரண்டாவது ஓவரில் டூ பிளசிஸ் சிக்ஸ் அடித்து அதிரடியைத் துவக்கினார். கடந்த போட்டியில் சதமடித்த கோலி இம்முறை 3 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனையடுத்து தனது முதலாவது போட்டியில் களமிறங்கிய வில் ஜாக்ஸ் 8 ரன்களில் அவுட்டானார். பின்னர் டூபிளஸிஸ் பட்டிதார் ஜோடி பொறுமையாக ஆடி அணியைச் சரிவிலிருந்து மீட்டது.
இருவரும் ஆகாஷ் மத்வால் பந்துவீச்சைப் பதம் பார்த்தனர். பெங்களூர் அணி 105 ரன்கள் எடுத்த நிலையில், கோயட்சி பந்தில் பட்டிதார், 50 ரன்களில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் டக் அவுட்டாகி ஏமாற்றினார். ஒருபக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுபக்கம் நிலைத்து நின்று ஆடிய டூபிளஸிஸ் இந்த சீசனில் முதல் அரைசதத்தைக் கடந்தார்.
பின்னர் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார். கீப்பர் பின்புறம் தேர்ட் மேன் (third man) திசையில் ஆகாஷ் மத்வால் ஓவரில் 4 பவுண்டரி அடித்தார். டூபிளஸிஸ் 61 ரன்க்ளுக்கு பும்ரா பந்தில் அவுட்டாக ஆட்டம் தினேஷ் கார்த்திக் பக்கம் வந்தது. ஒருபக்கம் விக்கெட் விழுந்தாலும் மறுபுறம் கார்த்திக் சிக்சர், பவுண்டரிகளாக நாலாபுறமும் விளாசினார். ஆகாஷ் மத்வாலின் கடைசி ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து 20 ஓவர் முடிவில் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 53 ரன்கள் எடுத்திருந்தார். பும்ரா அதிகபட்சமாக 4 ஓவரில் 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையும் படிங்க: ஐஎஸ்எல் கால்பந்து லீக்: பிளே ஆப், இறுதி போட்டிக்கான அட்டவணை வெளியீடு! - ISL Football Schedule