பெங்களூரு: ஐபிஎல் தொடர் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஜானி பேர்ஸ்டோ, ஷிகர் தவான் களமிறங்கினர்.
இதில் பேர்ஸ்டோ 8 ரன்கள் எடுத்து இருந்த போது சிராஜ் வீசிய பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த பிரப்சிம்ரன் அணியின் ஸ்கோரை நிதனமாக உயர்த்தினர்.
இதில் பிரப்சிம்ரன் 17 பந்துகளில் 25 ரன்கள் அடித்த நிலையில், மேக்ஸ்வெல் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனையடுத்து களமிறங்கிய லிவிங்ஸ்டோன் 17, சாம் கரன் 23, ஜிதேஷ் சர்மா 20 ரன்களுக்கு அவுட் ஆக பொறுப்புடன் விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் 45 ரன்களுக்கு அவுட் ஆனார்.
இதன் காரணமாக, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் கிங்ஸ் அணி 176 ரன்கள் குவித்தது. ஷஷாங்க் சிங்க் 21 ரன்களளுடனும், ஹர்ப்ரீத் பிரார் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆர்சிபி அணி தரப்பில் மேக்ஸ்வெல் மற்றும் சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெசிஸ் 3, வெளியேற அடுத்து வந்த கேமரூன் கிரீன் 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரஜத் படிதார் 18 ரன்னில், மேக்ஸ்வெல் 3 ரன்களுக்கு வெளியேற 12.1 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து தடுமாறியது ஆர்சிபி.
மறுபுறம் ஒற்றை ஆளாகப் போராடிய விராட் கோலி 49 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உட்பட 77 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷல் படேல் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். எனினும், கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடிய தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 10 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரி அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இதன்மூலம், 19.2 ஓவர்களில் பெங்களூரு அணி வெற்றி இலக்கை எட்டி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பஞ்சாப் அனி தரப்பில் ரபாடா, ஹர்பிரீத் பிரார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளிலும் சொந்த மைதானங்களில் விளையாடிய அணிகளே வெற்றி பெற்றுள்ளது சுவாரஸ்யமான சம்பவம் ஆகும்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2வது கட்ட அட்டவணை வெளியீடு - சிஎஸ்கே மோதும் ஆட்டங்கள் முழு விபரம்! - IPL CSK Schedule