துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டு உள்ளார். ரோகித் சர்மா தவிர்த்து மேலும் 6 இந்திய அணி வீரர்கள் ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து உள்ளனர். ஒருநாள் உலக கோப்பையில் சிறந்த விளங்கிய இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளில் இருந்தே அதிகளவிலான வீரர்கள் ஐசிசி ஒருநாள் அணிக்கு தேர்வாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் உள்ளிட்டோர் ஐசிசி ஒருநாள் அணியில் இடம் பிடித்து உள்ளனர். ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடிய ரோகித் சர்மா அந்த தொடரில் மட்டும் ஆயிரத்து 255 ரன்கள் குவித்தார்.
அவரைத் தொடர்ந்து மற்றொறு இந்திய வீரர் சுப்மன் கில், ரோகித் சர்மாவுடன் ஐசிசி ஒருநாள் அணியில் தொடக்க வீரராக களமிறங்குகிறார். 3வது வீரராக ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் அணியில் இடம் பிடித்து உள்ளார். மிடில் ஆர்டர் வரிசையில் இந்திய அணியின் ரன் மிஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலி, அவரைத் தொடர்ந்து டேரி மிட்செல், ஹென்ரிச் கிளெசன், மார்கோ ஜான்சன் ஆகியோர் அணியில் உள்ளனர்.
கடந்த ஆண்டு விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 6 சதம் உள்பட ஆயிரத்து 337 ரன்கள் குவித்து உள்ளார். மேலும், சச்சின் தெண்டுல்கரின் அதிக சதம் மற்றும் உலக கோப்பையில் தொடர் நாயகன் விருது சாதனைகளை விராட் கோலி முறியடித்து புது வரலாறு படைத்தார். பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பா, இந்திய வீரர்கள் முகமது ஷமி, முகமது சிராஜ், குல்திப் யாதவ் ஆகியோர் ஐசிசி ஒருநாள் அணியில் இடம் பிடித்து உள்ளனர்.
ஆண்டுதோறும் ஒருநாள் உள்ளிட்ட வடிவங்களில் சிறந்து விளங்கும் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களை ஒன்றிணைத்து கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி வெளியிட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான சிறந்த ஒருநாள் அணியை ஐசிசி அறிவித்து உள்ளது.
அதேபோல், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் அணியையும் ஐசிசி அறிவித்து உள்ளது. துரதிர்ஷ்டவசமாக ஐசிசி ஒருநாள் மகளிர் அணியில் ஒரு இந்திய வீராங்கனை கூட இல்லை என்பது வருந்தத்தக்கது.
இதையும் படிங்க : மியான்மர் ராணுவ விமானம் மிசோரத்தில் விபத்து: பயணித்தவர்களின் கதி என்ன?