மும்பை: ரஞ்சி கோப்பை 2024-இன் அரையிறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி, ரஹானே தலைமையிலான மும்பை அணியுடன் மோதி வருகிறது.
மும்பை சரத் பவார் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்ற தமிழ்நாடு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, தொடக்க வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினார். ஆனால், மும்பை அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தமிழ்நாடு அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தது.
சாய் சுதர்சன் எவ்வித ரன்களும் எடுக்க முடியாமல் டக் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து ஜெகதீசன் 4, பிரதோஷ் பால் 8, சாய் கிஷோர் 1, பாபா இந்தரஜித் 11 என தொடர்ச்சியாக விக்கெட்களை இழந்தனர். அதன்பின் களத்திற்கு வந்த விஜய் சங்கர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் மட்டுமே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, பொறுப்புடன் விளையாடினர். விஜய் சங்கர் 44 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 43 ரன்களும் சேர்த்தனர். இறுதியில் தமிழ்நாடு அணியால் 146 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.
மும்பை அணி சார்பில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்களும், முசீர் கான், ஷர்துல் தாக்கூர், தனுஷ் கோட்யான் ஆகியோர் தலா 2 விக்கெட்களும், மோஹித் அவஸ்தி 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து, மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.
முதல் நாள் முடிவில், அந்த அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 45 ரன்கள் சேர்த்துள்ளது. பிருத்வி ஷா 5 ரன்களிலும், பூபன் லால்வானி 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மேலும், முசீர் கான் 24 ரன்களுடனும், மோஹித் அவஸ்தி 1 ரன்னுடனும் களத்தில் நிற்கின்றனர். இந்திய அணியின் சார்பில் சாய் கிஷோர் மற்றும் குல்தீப் சேன் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றி உள்ளனர். மேலும், இரண்டாவது நாள் ஆட்டமானது நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'இது பார்டி டைம்'.. புஷ்பா 2 தீ ரூல் பற்றி ராஷ்மிகா கொடுத்த அப்டேட்!