சென்னை: தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் ‘பள்ளிகள் ஹாக்கிலீக்’ தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 3 கட்டங்களை உள்ளடக்கிய இந்த தொடரின் முதல் கட்டத்தில் 38 மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சுமார் 306 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இதில் இருந்து 38 அணிகள் தேர்வு செய்யப்பட்டு 2-வது கட்டமாக மண்டல அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன.
இந்த தொடரில் இருந்து வெற்றி பெற்ற அணி மற்றும் 6 மண்டல அணிகளில் இருந்து ஒருங்கிணைக்கப்பட்ட அணி என மொத்தம் 12 அணிகளை உருவாக்கி 3-வது கட்டமான மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது. கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி முதல் தொடங்கிய இறுதிகட்ட போட்டிகள் நேற்றுடன் நிறைவு பெற்றது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகளாக இந்த போட்டிகள் நடைபெற்றது.
இறுதி போட்டி: இதன் இறுதி போட்டியில் சையத் அம்மாள் மேல்நிலைப்பள்ளி மற்றும் மதுரை ஜோன் மிக்ஸ்டு அணிகள் பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோள் கணக்கில் மதுரை அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது சையத் அம்மாள் மேல்நிலைப்பள்ளி.
இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடிய சிவஸ்ரீதர், சுக்கின்தன் ஆகிய 2 மாணவர்களும் தலா 1 கோல் அடித்து அசத்தினர். இத்தொடரின் முடிவில் முதலிடத்தை ராமநாதபுரத்தை சேர்ந்த சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளியும், இரண்டாவது இடத்தை மதுரை மிக்ஸ்டு சோன் அணியும், மூன்றாவது இடத்தை திருச்சியை சேர்ந்த கஜாமைன் மேல்நிலைப்பள்ளி அணியும் வென்றன.
பரிசு: வெற்றி பெற்ற வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் முன்னாள் ஹாக்கி இந்திய வீரர் மற்றும் ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவரான திலிப் டிர்க்கி ஆகியோர் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி பாரட்டுகளை தெரிவித்தனர்.
இந்தநிகழ்வின் போது விளையாட்டுத்துறை கூடுதல் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, ஹாக்கி இந்திய பொருளாளர் சேகர் மனோகரன், ஹாக்கி லீக் நிர்வாகிகள் சார்லஸ் டிக்ஸன், இந்திரகுமார், கிளமெண்ட் லூர்துராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: வெள்ளி வென்ற அடுத்த கணமே வந்த கால்.. கால்நடை மருத்துவரின் பாராலிம்பிக்ஸ் கனவு சாத்தியமானது எப்படி?