கவுகாத்தி: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (மே.15) இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் 65வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 12 போட்டிகளில், 8 வெற்றிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றது. இருப்பினும் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் அந்த அணி தோல்வி அடைந்ததால் இன்றைய போட்டியில் வென்று வெற்றிப் பாதைக்கு திரும்புவதுடன், புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் நீடிப்பதை உறுதி செய்ய முனைப்பு காட்டும்.
மறுமுனையில் பஞ்சாப் அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்த நிலையில் ஆறுதல் வெற்றி பெறவும், புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருப்பதை தவிர்க்கும் நோக்கிலும் இன்றைய போட்டியில் களமிறங்கும். உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது பஞ்சாப் அணிக்கு கூடுதல் பலமாகும்.
கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் மோசமான பேட்டிங் காரணமாகவே அந்த அணி தோல்வியுற்றது. பேர்ஸ்டோ, சஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் சர்மா ஆகியோர் மட்டுமே அந்த அணிக்காக ரன் சேர்க்கின்றனர். மற்ற வீரர்களும் திறம்பட செயல்பட்டால் மட்டுமே, இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியால் வெற்றி வாகை சூட முடியும்.
ஐபிஎல் வரலாற்றில் இரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் ராஜஸ்தான் அணி 16 முறையும், பஞ்சாப் அணி 11 முறையும் வெற்றி பெற்று உள்ளன. ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் பஞ்சாப் அணி அதிகபட்சமாக 223 ரன்களையும், குறைந்தபட்சமாக 124 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி அதிகபட்சமாக 226 ரன்களையும், குறைந்தபட்சமாக 112 ரன்களையும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 48 ஆண்டுகளுக்கு பின் சென்னை சேப்பாக்கத்தில் களமிறங்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி! - யாருடன் மோதுகிறது தெரியுமா? - Ind Vs Sa Womens Cricket