சென்னை: 17வது ஐபிஎல் சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குவாலிஃபயர் முதல் போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணியை வென்று குவாலிஃபயர் இரண்டாவது போட்டிக்கு ராஜஸ்தான் அணி முன்னேறியது.
இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெறும் குவாலிஃபயர் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகிறது. இன்று வெற்றி பெறும் அணி வருகிற 26ஆம் தேதி சென்னையில் நடைபெறும் இறுதிப் போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதும். இரு சமபலம் வாய்ந்த அணிகள் மோதுவதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. இரு அணிகளும் இன்றைய போட்டிக்காக சென்னை வந்துள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் அணி நிர்வாகம் தங்களது எக்ஸ் பக்கத்தில் அணி வீரர்கள் சென்னை வந்திறங்கிய வீடியோவை 'கண்மணி அன்போடு காதலன்' பாடலோடு பிண்ணனியில் எடிட் செய்து பதிவிட்டுள்ளனர். இது நெட்டிசன்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் 'கண்மணி அன்போடு காதலன்' பாடலை பயன்படுத்தியதற்கு காப்புரிமை கேட்டு அப்பாடலின் இசையமைப்பாளர் இளையராஜா படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இதனையடுத்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் தற்போது இப்பாடலை பயன்படுத்தியுள்ளது.
இது இளையராஜாவை வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பது போல் உள்ளதாகவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் இளையராஜா காப்புரிமை கேட்க வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட்டு அவரை டேக் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மஞ்சும்மல் பாய்ஸ் நிறுவனத்துக்கு இளையராஜா நோட்டீஸ்! - Ilayaraja Vs Manjummel Boys