ஐதராபாத்: வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை முழுமையாக கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது இந்திய அணி. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியில் 113 ரன்களும் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார் தமிழக வீரர் அஸ்வின். அதேபோல் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது. இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அஸ்வின் பெற்ற தொடர் நாயகன் விருதுகளின் எண்ணிக்கை 11ஆக உயர்ந்தது. மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை தொடர் நாயகன் விருது வென்ற இலங்கை வீரர் முத்தையா முரளிதரனின் (11 முறை) சாதனையையும் அஸ்வின் சமன் செய்து புது உலக சாதனை படைத்தார்.
இந்நிலையில், முத்தையா முரளிதரனின் சாதனையை கடந்த ஆண்டே அஸ்வின் சமன் செய்து இருக்க வேண்டும் என்றும் தற்போது வங்கதேச தொடரில் அவர் வென்ற தொடர் நாயகன் விருது உலக சாதனையாகி இருக்க வேண்டும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடிய இந்திய அணி அதில் 1-க்கு 0 என்ற கணக்கில் தொடரி கைப்பற்றியது.
அந்த தொடரில் அஸ்வின் ஒட்டுமொத்தமாக 15 விக்கெடுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதுக்கான பட்டியலில் முன்னிலை வகித்தார். இருப்பினும், அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்படவில்லை. அவருக்கு அப்போது தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டு இருந்தால் தற்போதைய வங்கதேச தொடர் நாயகன் விருதின் மூலம் அவர் உலக சாதனை படைத்து இருப்பார்.
அஸ்வினுக்கு தொடர் நாயகன் விருது மறுக்கப்பட்டது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திடம் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், அதற்கு இந்தியா வாரியம் தான் முழுப் பொறுப்பு என்று கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதே கேள்வியை இந்திய வாரியத்திடம் எழுப்பப்பட்ட போது, வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான வணிக பணிகளை மட்டுமே வாரியம் மேற்கொண்டதாகவும், தொடர் நாயகன் விருது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்தின் அதிகார வரம்பின் கீழ் வருவதாக தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.
இப்படி இரண்டு வாரியங்களும் மாற்றி மாற்றி குற்றச்சாட்டு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. எவ்வாறாயினும், இந்திய அணி இந்த மாத இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. தொடர்ந்து நவம்பர் மாத இறுதியில் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாட இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
அடுத்தடுத்த இரண்டு டெஸ்ட் தொடர்களில் தமிழக வீரர் அஸ்வின் நிச்சயம் ஜொலித்து மீண்டும் ஒரு தொடர் நாயகன் விருது வென்று முத்தையா முரளிதரனின் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 17 ஆண்டுகளில் 600 மடங்கு உயர்வு! ஐபிஎலில் இப்படி ஒரு சாதனையா? - IPL franchise limit increase