கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 42வது போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், 9வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதி வருகின்றன.
இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. தொடக்க வீரர்களான சுனில் நரைன் மற்றும் பிலீப் சால்ட் ஆகியோர் விக்கெட்களை பறிகொடுக்காமல் சிறப்பாக விளையாடினர்.
இந்த கூட்டணியை ரபாடா, அர்ஷதீப் சிங் போன்ற பந்து வீச்சாளர்களால் வீழ்த்த முடியவில்லை. இவர்கள் 10 ஓவர்களிலேயே 130 ரன்களைக் கடந்தனர். சுனில் நரைன் மற்றும் சால்ட் அரைசதம் கடந்தனர். பின்னர், ராகுல் சாஹர் நரைனை வீழ்த்தினார். நரைன் 71 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதன் மூலம், அவர் இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்த பேட்டர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சால்ட் 75 ரன்களில் வெளியேற, ஷ்ரேயாஸ் ஐயர், ரசல், வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அவர்களது பங்கிற்கு 28, 24, 39 ரன்கள் முறையே எடுத்தனர். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 261 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பாக அதிகபட்சமாக அர்ஷதீப் சிங் 2 விக்கெட்களை வீழ்த்தினார். இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடி வருகின்றது.
இதையும் படிங்க: ஆற்று மணலை நேரடி விற்பனை செய்யக் கோரிய வழக்கு; நிலை அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு! - Sand Sales In TN