ஐதராபாத்: பாரீஸ் ஒலிம்பிக் மகளிர் துப்பாக்கிச் சுடுதலில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் மற்றும் கலப்பு இரட்டையர் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்று தந்த முதல் வீராங்கனை என்ற சிறப்பை மனு பாக்கர் பெற்றார்.
இந்நிலையில், அண்மையில் அளித்த பேட்டியில் தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரர்கள் குறித்து மனு பாக்கர் குறிப்பிட்டுள்ளார். அதில், "எனக்கு பல வீரர்களை பிடிக்கும், ஆனால் சில பெயர்களை மட்டும் இப்போது கூறுகிறேன். இந்திய அணியில் எனக்கு மிகவும் பிடித்த மூன்று கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர்.
அவர்கள் சச்சின் தெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி. இந்த மூவருடன் ஒரு மணி நேரம் கூட செலவிடுவது பெரிய கவுரவமாக கருதுகிறேன். அவர்களுடன் சிறிது நேரம் பேசுவது மிகுந்த உத்வேகத்தை அளிக்கும். உசேன் போல்ட்டின் வாழ்க்கை வரலாற்றைப் படித்திருக்கிறேன். அவரின் பல பேட்டிகளைப் பார்த்திருக்கிறேன்.
ஒலிம்பிக் போட்டி எனக்கு பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுத்தது. எனது கடந்த கால தோல்விகளில் இருந்து வெளியேற முயற்சிக்கிறேன், ஆனால் அது நாளுக்கு நாள் கடினமாகிக் கொண்டே செல்கிறது. அந்த நேரத்தில் எனக்குள் உத்வேகத்தை கொண்டு வர வேண்டும் என்பதர்காக டாட்டூ குத்திக் கொண்டேன்.
நான் மீண்டு எழுவேன் என்ற டாட்டூவை குத்திக் கொண்டேன். அது எனக்கு மிகவும் பிடித்த டாட்டூ, அதை காணும் போது மிகவும் ஊக்கப்படுத்துகிறது" என்று தெரிவித்தார். முன்னதாக சென்னையில் நடைபெற்ற தனியார் பள்ளி பாராட்டு விழாவில் மனு பாக்கர் கலந்து கொண்டார்.
அப்போது அவருக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் மாணவர்கள் சார்பில் 2 கோடியே 7 லட்ச ரூபாய் ஊக்கத் தொகை வழங்கியது. தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த மனு பாக்கர், அவர்களுடன் நடனமாடியும், பாட்டு பாடியும் மகிழ்ந்தார். முன்னதாக அந்த விழாவில் நடிகர் விஜய் குறித்து மனு பாக்கர் தெரிவித்து இருந்தது வைரலானது.
இதையும் படிங்க: அடுத்த பிசிசிஐ செயலாளர் யார்? ஒரு பதவிக்கு மூன்று பேர் கடும் போட்டி! யார் அது? - who is Next BCCI Secretary