சென்னை: நொளம்பூரில் உள்ள வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில், பாரீஸ் ஒலிம்பிக் போட்டி துப்பாக்கி சுடுதலில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை மனு பாக்கருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதலில் ஒற்றையர் மகளிர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கங்களை வென்றிருந்தார் இந்திய வீராங்கனை மனு பாக்கர்.
இந்நிலையில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் இந்த விழா நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேலம்மாள் பள்ளியில் பயிலும் மாணவர்கள் சார்பில் மனு பாக்கருக்கு 2 கோடியே 7 லட்ச ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு மனு பாக்கர் பதில் அளித்தவாறு அவர்களோடு உரையாடினார்.
பிரதமர் உங்களை போனில் அழைத்து பேசியது என்ன என கேட்கப்பட்ட கேள்விக்கு: பிரதமர் என்னை அழைத்து பதக்கம் வென்றதற்காக பாராட்டினர், அடுத்தடுத்த பயணங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். அது எனக்கு மிகவும் பெருமையான தருணமாக இருந்தது. நான் வெள்ளிப் பதக்கம் வெல்வேன் என எதிர்பார்த்தேன், ஆனால் வெண்கலம் தான் கிடைத்தது. சிறிய புள்ளி அளவில் தான் வெள்ளிப் பதக்கத்தை தவற விட்டேன். இருப்பினும் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக வெண்கலம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
கல்வி மற்றும் விளையாட்டு என இரண்டையும் எவ்வாறு சமாளித்தீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு: நான் கல்வியையும் விட்டுக்கொடுக்கவில்லை, விளையாட்டையும் விட்டுக் கொடுக்கவில்லை. நீங்களும் உங்கள் கல்வி மற்றும் விளையாட்டை சரி சமமாக கையாள வேண்டும். எனது பெற்றோர் நான் கல்வி பயில்வதை எனது மதிப்பெண் அட்டை மூலமாக கண்காணித்து கொண்டே இருப்பார்கள். கல்விக்கும், விளையாட்டுக்கும் சேர்ந்து முக்கியத்துவம் கொடுக்க செய்தார்கள் என்றார்.
VIDEO | " my inspiration came from my mother. she made me the way i am today. she told me to take inspiration, but not to become like anyone else. without parents' support, a child cannot do much," said paris olympics medallist shooter manu bhaker (@realmanubhaker) during an event… pic.twitter.com/scEn3tU53S
— Press Trust of India (@PTI_News) August 20, 2024
மேலும் உங்களுக்கு பிடித்த தென்னிந்திய உணவு எது என்ற கேள்விக்கு: எனக்கு பொங்கல் மிகவும் பிடிக்கும், எனது வீட்டில் எனது அம்மா சமைக்கும் தோசை மிகவும் பிடிக்கும் என்றார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை தெரியுமா என்ற கேள்விக்கு: தெரியாது என்று மனு பாக்கர் பதில் அளித்தார்.
பிரக்ஞானந்தாவை தெரியுமா என்ற கேள்விக்கு: நன்றாக தெரியும் என்றும்.
நடிகர் விஜய் தெரியுமா என்ற கேள்விக்கு: நடிகர் விஜயை நன்றாக தெரியும் என்று மனு பாக்கர் பதில் கூறினார்.
உங்களுக்கு ஷூட்டிங் விளையாட்டில் எப்படி ஆர்வம் வந்தது என்று மாணவி ஒருவர் கேட்ட கேள்விக்கு: எனக்கு பள்ளிப் பருவத்தில் தான் ஷூட்டிங் மீது ஆர்வம் வந்தது. பள்ளிப் பருவத்தில் இருந்து தான் தேசிய ஷூட்டிங் அணியில் இடம் பிடிக்க வாய்ப்பு கிடைத்தது. என் உடல் வலிமையை கொண்டு குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வந்த நான், ஷூட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினேன். அதுதான் எனது முதல் படி என்றார்.
யாரை உங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டீர்கள் என்ற கேள்விக்கு: மற்றொருவரை போல வர முயற்சி செய்ய வேண்டாம். உங்களின் ஒரு நல்ல பகுதியை எடுத்துக் கொண்டு நீங்கள் நீங்களாக உங்கள் அடையாளத்தை நிரூபிக்க வேண்டும். மற்றொருவரை பார்த்து காபி அடிக்க வேண்டாம். ஆனால் ஒருவரை இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து மாணவியின் கோரிக்கையை ஏற்று, தேகா தேனு பெஹ்லி பெஹ்லி பார் வெ (Dekha Tenu Pehli Pehli Baar Ve) என்ற இந்தி பாடலை பாடினார். அதைத் தொடர்ந்து காலா சேஸ்மா எனும் இந்தி பாடலுக்கு மாணவ மாணவியருடன் மனு பாக்கர் நடனமும் ஆடினார்.
இதையும் படிங்க: ஒரே ஓவர்.. 39 ரன்.. யுவராஜ் சிங் சாதனை குளோஸ்! எப்படி நடந்தது? - Yuvraj Singh T20 record break