அமெரிக்கா: டி20 உலகக் கோப்பையில் 36வது லீக் போட்டியில் பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் மோதின. இந்த குரூப்பில் இருந்து சூப்பர் 8 சுற்றுக்கு ஏற்கெனவே இந்தியா, அமெரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில், பாகிஸ்தான், அயர்லாந்து அணிகள் ஆறுதல் வெற்றிக்காக விளையாடின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது. ஷகின் அஃப்ரிதி,தமது வேகத்தில் முதல் ஓவரிலேயே அயர்லாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் பால்பிர்னி (0), டக்கர் (2) ஆகியோரை வெளியேற்றினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய ஸ்டெர்லிங் 1 ரன்னிலும், டெக்டர் ரன் எடுக்காமலும் நடையை கட்டினர். அயர்லாந்து அணியின் மிடில் ஆர்டர் மீட்டெடுக்கும் என எதிர்பார்த்த நிலையில், டாக்ரெல் (11) ரன்களிலும், காஃம்பேர் (7) ரன்களிலும் அவுட்டாக, 32 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. அடுத்து வந்த டெலானி, அடைர் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்கள் சேர்த்தது.
அப்போதும் பெரும் ஸ்கோரை எட்ட முடியாத நிலையில், டெலானி 31 ரன்களிலும், அடைர் 15 அவுட்டாகினர். அடுத்து வந்த டெயிலேண்டர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எளிதான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணிக்கு ரிஸ்வான், அயூப் ஆகியோர் சுமாரான தொடக்கத்தை அளித்தனர். அயூப், ரிஸ்வான் இருவரும் தலா 17 ரனக்ளுக்கு நடையை கட்டினர். பின்னர் வந்த ஃபகர் சமான் (5), உஸ்மான் (2), ஷதாப் கான்(0) வந்த வேகத்தில் அவுட்டாக, பாகிஸ்தான் 57 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து திணறியது. ஆனால் கேப்டன் பார் அசாம் மட்டும் ஒரு பக்கம் பொறுமையாக ரன்கள் சேர்த்தார்.
அவருக்கு அப்பாஸ் அஃப்ரிதி, ஷாகின் அஃப்ரிதி ஆகியோர் துணையாக ரன்கள் சேர்த்தனர். இதனால் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 32 ரன்களுக்கு அவுட்டாகாமல் இருந்தார். அயர்லாந்து அணி சொற்ப ரன்களுக்கு அவுட்டானாலும் போராடி தோல்வி அடைந்தது.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்த ஸ்காட்லாந்து... இங்கிலாந்துக்கு அடித்தது அதிர்ஷ்டம்! - T20 World cup 2024