ஹைதராபாத்: ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் இறுதியில் தொடங்க உள்ள நிலையில், எந்த அணி எந்த வீரர்களைத் தக்க வைக்கப் போகிறது என்பது தொடர்பான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி 2025 ஐபிஎல் தொடருக்கு 5 முக்கிய வீரர்களை தக்க வைத்த அறிவிப்பை வெளியிட்டு, அந்த அணியின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படாததால் ரோகித் சர்மா, மும்பை இந்தியன்ஸ் அணியில் வெளியேறுவார் என்று தகவல்கள் பரவி வந்தது. ஆனால், ரோகித் சர்மாவை தக்க வைத்து வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறது அணி நிர்வாகம். மேலும், வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா என நான்கு பெரிய வீரர்களை தக்க வைத்திருக்கிறார். இதன் மூலமாக 10 அணிகளில் பலமான வீரர்களை தக்க வைத்த அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வலம் வருகிறது.
𝗥𝗘𝗧𝗔𝗜𝗡𝗘𝗗 💙💙💙💙💙
— Mumbai Indians (@mipaltan) October 31, 2024
“We have always believed that the strength of a family lies in its core and this belief has been reinforced during the course of recent events.
We are thrilled that the strong legacy of MI will be carried forward by Jasprit, Surya, Hardik, Rohit and… pic.twitter.com/WzXhHe7v1Y
இதையும் படிங்க: 2025 சீசனில் களமிறங்கும் தோனி.. சிஎஸ்கேவில் தக்க வைக்கப்பட்டுள்ள மற்ற வீரர்கள் யார்?
இதில் 18 கோடி ரூபாய்க்கு முதல் வீரராக பும்ராவை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இதை அடுத்து, இரண்டாவது வீரராக சூர்யகுமார் யாதவுக்கு 16 கோடியே 35 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது, 3வது மற்றும் 4வது வீரராக ஹர்திக் பாண்டியா மற்றும் ரோகித் சர்மாவை தக்க வைத்துள்ளனர். இருவருக்கும் சம்பளமாக 16 கோடியே 35 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5வது வீரராக திலக் வர்மாவுக்கு எட்டு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் அந்த அணியின் நட்சத்திர வீரர் இஷான் கிஷன், டிம் டேவிட் போன்ற வீரர்கள் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் ஆர்டிஎம் கார்டைப் பயன்படுத்தி இஷான் கிஷன் அல்லது டிம் டேவிட் ஆகியோர் தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அதேபோல், தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி மொத்த தொகையான 120 கோடி ரூபாயில், 75 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது. இதனால் மீதமுள்ள 45 கோடி ரூபாயை வைத்து அந்த அணி எந்த மாதிரியான வீரர்களை தேர்வு செய்யவுள்ளது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.