விசாகபட்டினம்: நடப்பு ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டி ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 192 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் வெற்றி பெற்றது.
17 பந்தில் 37 ரன்கள்: டெல்லி அணிக்கு எதிரான இந்த போட்டியில் 16வது ஓவரில் களமிறங்கினார் தோனி. கிட்டத்தட்ட ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வெற்றிபெறுவது கடினம் என்று பார்க்கப்பட்டது. இருப்பினும் ஓராண்டுக்குப் பின் தோனி பேட்டிங் செய்வதை ரசிகர்கள் பார்ப்பதால், விசாகப்பட்டிணம் மைதானம் முழுவதும் உற்சாகத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் "தோனி தோனி" என ஆரவாரம் செய்தனர். இதனால் மைதானத்தில் 128 டெசிபல் இருந்தது.
இந்த போட்டியில் 16 பந்துகளை எதிர்கொண்ட தோனி 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் விளாசினார். இதனைப் பார்த்த தோனி ரசிகர்கள் 'விண்டேஜ் தோனி இஸ் பேக்' என சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இந்த போட்டி முடிவுற்ற பின்னர் விசாகப்பட்டினம் மைதான ஊழியர்கள் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
எம்.எஸ்.தோனி புதிய சாதனை: இந்த போட்டியின் அதிரடியாக விளையாடிக் கொண்டு இருந்த டெல்லி பேட்ஸ்மேன் பிரித்வி ஷா 43 ரன்கள் எடுத்த இருந்த போது ஜடேஜா வீசிய பந்தில் தோனியுடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் மூலம் விக்கெட் கீப்பராக 300 பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் தோனி.
தோனியைத் தொடர்ந்து பாகிஸ்தானின் விக்கெட் கீப்பர் கம்ரான் அக்மல் (274), இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் (274) ஆகிய இருவரும் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் குயீண்ட டி காக் (270), இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் (209) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளனர்.
இதையும் படிங்க: ரிஷப் பண்ட் ரிட்டன்..சிஎஸ்கேவை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அபாரம்!