ஐதராபாத்: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு ஐபிஎல் சீசன கிளைமாக்ஸ் காட்சிகளை நெருங்கி வரும் நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற அனைத்து அணிகளும் கடுமையாக போராடி வருகின்றன.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணிக்காக 6 ஆட்டங்களில் விளையாடி 13 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் மதீஷா பத்திரனா.
யாக்கர் பந்துகளை வீசி எதிரணி பேட்ஸ்மேன்களை திண்றடிக்கும் திறன் கொண்ட மதீஷா பத்திரனா தொடை எலும்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அவதியுற்று வந்தார். இந்நிலையில், காயத்திற்கு சிகிச்சை பெற மதீஷா பத்திரனா மீண்டும் இலங்கைக்கு திரும்பியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடந்த சில நாட்களாக வீரர்கள் காயம் அடைவது பெரும் தலைவலியாக மாறி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தொடைப் பகுதியில் ஏறபட்ட காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் பாதியிலேயே வெளியேறினார்.
இன்னும் அவர் பூரண குணமடையவில்லை என சென்னை அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் கலந்து கொள்வதற்காக சொந்த நாட்டுக்கு திரும்பினார். நடப்பு சீசனில் சென்னை அணிக்காக 9 ஆட்டங்களில் விளையாடி 14 விக்கெட்டுகளை முஸ்தபிசுர் ரஹ்மான் வீழ்த்தியுள்ளார்.
இப்படி அடுத்தடுத்து வீரர்கள் விலகி இருப்பதால் சென்னை அணி சற்று பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. பிளே ஆப் சுற்றில் நீடிக்க வேண்டும் என்றால் இன்று (மே.5) நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.
இதையும் படிங்க: பஞ்சாப் அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்கு! பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யுமா சென்னை? - IPL2024 CSK VsPBKS Match Highlights