கோயம்புத்தூர்: 8வது தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடர் கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த அணியில் மொத்தம் 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இதில், லீக் சுற்றில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். இந்நிலையில் டி.என்.பி.எல் தொடரில் 11வது லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் - நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற கோவை அணி கேப்டன் சாரூக் கான் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
இதன்படி நெல்லை அணியில் தொடக்க வீரர்களாக அருண் கார்த்திக் மற்றும் ஹரிஹரன் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஹரிஹரன் 1 ரன் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ஹரிஷ் 29 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். பின்னதாக களமிறங்கிய குருசாமி அஜிதேஷ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருபுறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்த நிலையில் மறுபுறம் நிதானமாக ஆடிய நெல்லை கேப்டன் அருண் கார்த்திக் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரி என 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
Lyca Kovai Kings breeze through the chase to register a splendid victory! 🏏
— TNPL (@TNPremierLeague) July 13, 2024
📺 Watch #TNPL2024 live on Star Sports 1, Star Sports 1 Tamil, and FanCode.#LKKvNRK #NammaOoruAattam #TNPL2024 #NammaOoruNammaGethu pic.twitter.com/WVRS9tSUXe
அடுத்ததாக ராஜகோபால் 3 ரன்களிலும், ஈஸ்வரன் 8 ரன்களிலும் ஆட்டமிழக்க, சோனு யாதவ் தனித்து நின்று 26 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து அதிரடி காட்டினார். இறுதியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்தது. கோவை தரப்பில் ஷாருக் கான், முகமது ஆகியோர் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இதனையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை அணிக்கு சாய் சுதர்சன் மற்றும் சுரேஷ் குமார் ஜோடி துவக்கம் தந்தனர். நட்சத்திர வீரரான சாய் சுதர்சன் 8 ரன்கள் மட்டுமே எடுத்து அதிர்ச்சி அளித்தார். பின்னர் களமிறங்கிய பாலசுப்பிரமணியன் சச்சின், மற்றொரு துவக்க வீரர் சுரேஷ் குமாருடன் சேர்ந்து வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இதில், பாலசுப்ரமணியன் 48 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ரிட்டையிடு ஹட் முறையில் வெளியேறினார்.
சிறப்பாக, ஆடிய சுரேஷ் குமார் 55 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். இறுதியில் லைகா கோவை கிங்ஸ் அணி 18.3 ஓவர்களிலேயே 1 விக்கெட் மட்டுமே இழந்து, 172 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: அதிரடி காட்டிய அனிருத்...மதுரையை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது திருப்பூர்!