மும்பை: நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நேற்று மும்பையில் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல், படிக்கல் களமிறங்கினர். துஷாரா பந்தில் படிக்கல் டக் அவுட்டாகி ஏமாற்றினார்.
இந்த சீசனில் முதல் போட்டியில் களமிறங்கிய அர்ஜுன் டெண்டுல்கர் ஆக்ரோஷமாக பந்து வீசினார். 3வது வீரராக களமிறங்கிய ஸ்டொய்னிஸ் அதிரடியாக ஆடினார். அவர் 28 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் களமிறங்கிய ஹூடா 11 ரன்களுக்கு நடையை கட்டினார்.
அடுத்து களமிறங்கிய பூரான் ஆரம்பம் முதலே சிக்சர்களாக பறக்கவிட்டார். மறுபுறம் கேப்டன் கே.எல்.ராகுல் சீரான இடைவெளியில் சிக்சர், பவுண்டரிகளாக அடித்து வந்தார். இந்த ஜோடி அணியின் ரன்ரேட்டை உயர்த்தியது. வாண வேடிக்கை காட்டிய பூரான், 19 ரன்களில் அரைசதம் கடந்தார். அவர் 75 ரன்களுக்கு சூர்யகுமார் பவுண்டரி லைனில் பிடித்த சூப்பர் கேட்ச்சில் அவுட்டானார். கே.எல்.ராகுல் 55 ரன்களுக்கு அவுட்டாக லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. மும்பை அணி சார்பில் துஷாரா, சாவ்லா தலா 3 விக்கெட் எடுத்தனர்.
இமாலய இலக்கை விரட்டிய மும்பை அணியின் ரோகித் சர்மா, பிரெவிஸ் ஆகியோர் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினர். மேட் ஹென்றி ஓவரில் ரோகித் சர்மா அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் அடித்தார். பிரெவிஸ் தன் பங்கிற்கு 2 சிக்சர்கள் விளாசினார். 28 ரனகள் எடுத்திருந்த பிரெவிஸ் 23 ரன்களுக்கு நவீன் உல் ஹக் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் டக் அவுட்டானார். அதிரடியாக விளையாடி 68 ரன்கள் எடுத்த ரோகித் சர்மா பிஷ்னாய் பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 16 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார்.
வதேராவும் 1 ரன்களுக்கு அவுட்டாக, மும்பை அணி பேட்டிங்கில் திணறத் தொடங்கியது. பின்னர் களமிறங்கிய நமன் திர் நாலா பக்கமும், சிக்சர்களாக அடித்து மும்பை அணியை மீட்டெடுத்தார். இஷான் கிஷன் 14 ரன்களுக்கு அவுட்டானார். கடைசி வரை நமன் திர் பவுண்டரி, சிக்சர்களாக அடித்தும் அணியை வெற்றி பெற செய்ய முடியவில்லை.
மும்பை அணி 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. லக்னோ அணி சார்பில் நவீன் உல் ஹக், பிஷ்னாய் 2 விக்கெட் எடுத்தனர். லக்னோ அணி ஆறுதல் வெற்றியுடன் இந்த ஐபிஎல் தொடரை நிறைவு செய்தது. மறுபுறம் மும்பை அணிக்கு இந்த சீசன் ஏமாற்றமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஐபிஎல் அணிகளுக்கு வருமானம் எப்படி வருகிறது? - Ipl Money Making