கான்பூர்: வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேச மாநிலத்தின் கான்பூர் கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் நாள் ஆட்டம் போதிய வெளிச்சமின்மை மட்டும் கனமழை காரணமாக பாதியிலேயே கைவிடப்பட்டது.
அன்றைய நாளில் மொத்தம் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், வங்கதேசம் அணி 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டும், அஸ்வின் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்நிலையில், இந்திய அணியில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கும் நிலையில், ரவீந்திர ஜடேஜாவை காட்டிலும், தமிழக வீரர் அஸ்வினுக்கே, கேப்டன் ரோகித் சர்மா அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.
அஸ்வினுக்கு முக்கியத்துவம் காரணம் என்ன?
இந்திய லெவனில் இடம் பிடித்த போதும் முதல் நாள் ஆட்டத்தில் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை என முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேக்கர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கேப்டன் ரோகித் சர்மா சுழற்பந்து வீச்சில் அஸ்வினுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவும், களத்தில் இரண்டு இடக்கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில், ஜடேஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் இருப்பது ஆச்சரியம் அளிப்பதாக மஞ்சரேக்கர் கூறினார்.
இது குறித்து பேசிய சஞ்சய் மஞ்சரேக்கர், "ஒவ்வொரு கேப்டனுக்கும் ஆட்டத்தின் மீதான கண்ணோட்டம் என்பது மாறுபட்டதாக இருக்கும். அது அவர் பந்துவீச்சாளர்களை எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்கிறார் என்பதை குறிக்கும். கேப்டன்கள் சில பவுலர்களை அதிகம் நம்பியிருப்பது தவறில்லை.
அலஸ்டையர் குக் Vs ரவீந்திர ஜடேஜா:
Rohit needs to be shown this stat-
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) September 27, 2024
JADEJA vs COOK, 2016 series :
In 8 inngs, got him out 6 times, conceded just 75 runs.
Rohit tends to not bowl Jadeja early when there are left landers out there. #INDvsBANTEST
அதை நான் பார்த்திருக்கிறேன், குறிப்பாக இந்தத் தொடரில் சுழற்பந்துவீச்சு என்று வரும்போது, ரோகித் சர்மா அஸ்வினை கொஞ்சம் அதிகமாக ஈடுபடுத்த விரும்புகிறார். களத்தில் இரண்டு இடக்கை பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில், அவரது தேர்வு என்பது சற்று மாறுதலாக இருந்திருக்க வேண்டும்.
முதல் டெஸ்ட்டில் ரிஷப் பன்ட் மற்றும் ஷகிப் அல் ஹசன் இருவருக்கும் இடையே நடந்ததை அனைவரும் அறிந்து இருக்க முடியும், அதேபோல் இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடக் கூடிய ஜடேஜா போன்ற வீரர்களை ரோகித் சர்மா பயன்படுத்திக் கொள்வது அவசியம் ஆகும்.
இங்கிலாந்து நட்சத்திர வீரர் அலஸ்டையர் குக்கின் விக்கெட்டை 8 இன்னிங்ஸ்களில் 6 முறை வீழ்த்திய அனுபவம் கொண்ட ஜடேஜாவை இடக்கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ரோகித் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என மஞ்சரேக்கர் கூறினார்.
இதையும் படிங்க: மழையால் கைவிடப்பட்ட 2வது நாள் ஆட்டம்! இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் ரத்தாகுமா? - Ind vs Ban Match abandoned