பெங்களூரு: 17வது ஐபிஎல் கிரிக்கெட்டின் 30வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன்ஸ் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணி - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் பலப்பரீட்சை செய்தது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் பவுலிங்கை தேர்வு செய்தார்.
ஹைதராபாத் அணியின் சார்பில் டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் சர்மாவும் தொடக்கத்தில் களமிறங்கினர். இதில் வீசிய பந்துகளை எல்லாம், பவுன்டரிகளை நோக்கி தெறித்து ஓட வைத்தார், டிராவிஸ். பின்னர் வந்த யாஷ் தயாள், டாப்லேவின் பந்துவீச்சில் சிக்சர்களை பறக்க வைத்து சன் ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் ட்ராவிஸ் ஹெட் வெறும் 20 பந்துகளில் அதிரடி அரை சதம் விளாசினார்.
பின்னர், 7.1 ஓவர்களில் 100 ரன்களை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எட்டியது. 108 ரன்களை எடுத்திருந்த நிலையில், டாப்லேவின் பந்துவீச்சில் அபிஷேக் சர்மா கெட்ச் கொடுத்து அவுட் ஆகினார். அடுத்து களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் நிதானமாக ஆடி ரன்களை குவித்தார். இதனிடையே, டிராவிஸ் ஹெட் 39 பந்துகளில் (101) சதம் விளாசி அதிரடி பேட்டிங் செய்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். இது ஐபிஎல் போட்டியில் இவர் அடித்த 4வது சதமாகும். மொத்தமாக இவர் மட்டும் 41 பந்துகளில் 9 பவுன்டரி, 8 சிக்சர் என 102 ரன்களை குவித்தார். ஆட்டத்தின் இறுதியில் பெங்களூருக்கு 288 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில், வெற்றி பெற வேண்டும் என்ற தீர்மானத்தோடு களமிறங்கிய பெங்களூரு அணியின் கேப்டன் பாப் டு பிளிஸ்சிசும், விராட் கோலியும் பவர் - பிளேயானது முதல் 6 ஓவர்களில் 79 ரன்களை குவித்திருந்தனர். பின்னர், 20 பந்துகளில் 42 ரன்களை கோலி குவித்ததால், ஸ்கோர் 80 ஆகியது. அப்போது, இம்பேக்ட் பவுலரான மயங்க் மார்க்கண்டேயின் சுழற்பந்து வீச்சில் போல்ட் ஆகினார்.
அடுத்தடுத்து களமிறங்கிய வில் ஜாக்ஸ் 7 ரன்களும், ரஜத் படிதார் 9 ரன்களும் எடுத்த நிலையில், சவுரவ் சவுகான் ரன்கள் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவர்களுக்கு அடுத்து களமிறங்கிய அனியின் கேப்டன் பிளிஸ்சிஸ் 28 பந்துகளில் 7 பவுன்டரி, 4 சிக்சர் என 62 ரன்களைக் குவித்தார்.
அடுத்ததாக களமிறங்கிய விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக், ஹைதராபாத் அணியின் பந்துகளை அடித்து துவம்சம் செய்தார். இவர் தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஆவார். உனட்கட் வீசிய ஒரு ஓவரில் மட்டும் 3 பவுன்டரி, ஒரு சிக்சர் என அடித்து ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து பந்து வீசிய கம்மின்ஸின் பந்துகளில் இவர் அடித்த 2 சிக்சர்களைத் தொடர்ந்து ரசிகர்களின் உற்சாகத்தில் மைதானமே அதிர்ந்து போனது. இவரது அசத்தலான ஆட்டத்தால், பெங்களூரு அணி மிகவும் எளிமையாக 200 ரன்களை கடந்தது. மைதானத்தையே ஒரு கலக்கு கலக்கிய தினேஷ் கார்த்திக், 35 பந்துகளில் 5 பவுன்டரி, 7 சிக்சர் என 83 ரன்களை அடித்தார். பின்னர், கேட்ச் கொடுத்து அவுட் ஆகினார்.
20 ஓவர் முடிவில், பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்களை அடித்து தோல்வியை தழுவியது. இதனால், 25 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி வாகையை சூடியது. இது ஹைதராபாத் அணிக்கு 4வது வெற்றியாகும். இந்த தோல்வியினால், புள்ளிப்பட்டியலில் பெங்களூரு அணி 6 வது இடத்திற்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வரலாற்று சாதனை படைத்த ஐதராபாத்! பெங்களூருவுக்கு 288 ரன்கள் வெற்றி இலக்கு! டிராவிஸ் ஹெட் அபார சதம்! - SRH Vs RCB IPL2024 Match Highlights