பெங்களூரு:17வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி, நாட்டில் பல்வேறு நகரங்களில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், நடப்பு ஐபிஎல் தொடரின் 15வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த போட்டியானது தொடங்கப்படவுள்ளது.
டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி, 2 தோல்விகளை சந்தித்து புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அதேபோல், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, 2 போட்டிகளில் விளையாடி 1இல் வெற்றி 1இல் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் 6வது இடம் வகிக்கிறது.
மைதானம் எப்படி? பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியம், பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. எனவே, இன்றைய போட்டியில் இரு அணிகளும் சிக்ஸர் மழை பொழியும் என்று எதிர்பார்க்கலாம்.
இதுவரை இந்த மைதானத்தில் நடந்துள்ள 90 ஐபிஎல் போட்டிகளில், முதலில் பேட்டிங் செய்த அணிகள் 37 போட்டிகளிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 49 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலம் மற்றும் பலவீனம்: பேட்டிங்கில் பலம் பொருந்தியதாக பார்க்கப்படும் ஆர்சிபி அணியில், விராட் கோலியை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பார்மில் இல்லாதது அந்த அணியின் பலவீனத்தை அதிகரித்துள்ளது. இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள டு பிளெஸ்ஸிஸ் (46 ரன்கள்), கேமரூன் கிரீன் (53 ரன்கள்), ரஜத் பட்டிதார் (21 ரன்கள்) மற்றும் கிளென் மேக்ஸ்வெல் 23 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளனர்.
இறுதியில் களமிறங்கி விளையாடக்கூடிய தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் ஆகியோர் நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் விளையாடி வருகின்றனர். அதேபோல் பந்துவீச்சிலும் அந்த அணி வீரர்கள் யாரும் பெரிதாக சோபிக்கவில்லை. தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வரும் முகமது சிராஜ், 10 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்துள்ளார். அதேபோல், 11.50 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஜோசப்பும் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் வழங்கியுள்ளார்.
லக்னோ அணியைப் பொறுத்தவரையில், உடற்தகுதியிலிருந்து மீண்டு வந்த கே.எல்.ராகுல் பார்முக்கு திரும்ப வேண்டும் என போராடி வருகிறார். இதனால் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இம்பேக்ட் பிளேயராக களமிறங்கினார்.
இதனால் இன்றைய போட்டியில் நிக்கோலஸ் பூரன் அணியை வழிநடத்தக்கூடும். பேட்டிங்கில் குயிண்டன் டி காக், குருணல் பாண்டியா ஆகியோர் சிறப்பான முறையில் விளையாடி வருகின்றனர். அதேபோல், பந்து வீச்சில் 21 வயதான மயங்க் யாதவ் மிடட்டி வருகிறார். இரு அணிகளும் சம பலத்துடன் இருப்பதால், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இதையும் படிங்க: ஐபிஎல் புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் அணி முதலிடம்! மும்பை அணி ஹாட்ரிக் தோல்வி