சென்னை: 17வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் ராஜஸ்தான் அணி சிறப்பாக விளையாடி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை தக்க வைத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3வது இடத்திலும் உள்ளது.
இதில் சென்னை அணி விளையாடிய 6 போட்டிகளில், 4 போட்டிகளில் வென்றுள்ளது. டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராகவும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராகவும் என 2 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. சென்னை அணி அடுத்து வரவுள்ள இரண்டு போட்டிகளில் தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.
அதில் நாளை மோதவுள்ள போட்டி லக்னோ மைதானத்திலும், அதன்பின் 23ஆம் தேதி மோதவுள்ள போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வருகிற 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறவுள்ள போட்டியின் ஆண்லைன் டிக்கெட் விற்பனை, நாளை மறுநாள் (ஏப்.20) காலை 10.40 மணி அளவில் தொடங்கும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, www.insider.in என்ற இணையதளத்தில் மட்டுமே பயன்படுத்தி டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம் என கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல், ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட்டின் விலை ரூ.1,700ல் இருந்து ரூ.6,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, C D E லோயர் இருக்கைக்கு 1,700 ரூபாயும், I J K அப்பர் இருக்கைக்கு 2,500 ரூபாயும், I J K லோயர் இருக்கைக்கு 4,000 ரூபாயும் C D E அப்பர் இருக்கைக்கு 3,500 ரூபாயும், K M K மொட்டை மாடிக்கு 6,000 ரூபாயும் என டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், டிக்கெட் பதிவு செய்பவர்கள் எந்த நுழைவாயில் வழியாக வர வேண்டும் எனவும், வாகனங்களை எங்கு நிறுத்த வேண்டும் எனவும், அதற்கான வழிமுறைகளையும் தெரிவித்து உள்ளனர். முதல் இரண்டு போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. அதில் வெற்றி பெற்று முதல் இடத்தில் இருந்த சென்னை அணி அடுத்தடுத்த போட்டிகள் பெற்ற தோல்வியால் முதல் இடத்தில் இருந்து இறங்கியது.
அதன் பின்னர் இரண்டு வெற்றிகளைப் பெற்று தற்போது புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், அடுத்த போட்டியிலும், அதன்பின் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறும் போட்டியிலும் வென்று 2வது அல்லது முதல் இடத்திற்கு முன்னேறும் என சென்னை அணியின் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: கோவையில் வாக்காளர்களுக்கு ஆன்லைன் பணப்பரிவர்த்தனையா? திமுக - பாஜக மாறி மாறி புகார்! - Lok Sabha Election 2024