விசாகப்பட்டினம்: 17வது ஐபிஎல் தொடரின் 13வது லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - சென்னை சூப்பட் கிங்ஸ் அணியை (DC vs CSK) எதிர்கொண்டது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார்.
டெல்லி அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக பிரித்வி ஷா - டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து டெல்லி அணிக்கு வலுவான ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில், 52 ரன்கள் எடுத்து இருந்த டேவிட் வார்னர், மதீஷா பதிரனா வீசிய பந்தில் முஸ்தபிசுர் ரஹ்மானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதனைத்தொடர்ந்து மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேனான பிரித்வி ஷா 42 ரன்களுக்கு வெளியேற, அடுத்து வந்த மிட்செல் மார்ஷ்(18), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ்(0) உள்ளிட்ட யாரும் பெரியதாக சோபிக்கவில்லை. இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது டெல்லி கேபிடல்ஸ். பொறுப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் அரைசதம் விளாசினார். சிஎஸ்கே அணி தரப்பில் மதீஷா பத்திரனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
இதனையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேப்டன் ருதுராஜ் 1 ரன்னுக்கும், மற்றொரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரா 2 ரன்களுக்கு வெளியேறினர்.
அதன் பின்னர், ரஹானே - டேரில் மிட்செல் ஆகிய இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை மெல்ல உயர்த்தினர். இதில் மிட்செல் 34 ரன்களிலும், ரஹானே 45 ரன்களும் வெளியேறினார். சமீர் ரிஸ்வி, ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்தில் விக்கெட்டை இழந்தார். துபே, 18 ரன்களில் வெளியேறினார்.
இதனையடுத்து களத்திற்கு வந்த தோனி - ஜடேஜாவுடன் கூட்டணி சேர்ந்து அதிரடியாக விளையாடி சென்னை அணி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால், 20 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் கலீல் அகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் மூலம் நடப்பு சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது டெல்லி கேபிடல்ஸ். அதே போல் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ஒயிட் பால் கேப்டனாக பாபர் அசாம் நியமனம்! ஷாகீன் ஷா அப்ரிடி நீக்கத்திற்கு என்ன காரணம்?