டெல்லி: கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கிய டி20 உலகக்கோப்பை தொடர் சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது.தற்போது அமெரிக்காவில் நடந்துவரும் லீக் சுற்று போட்டிகள் வருகின்ற ஜூன் 18 உடன் முடிவடைக்கின்றன. அடுத்ததாக சூப்பர் 8 சுற்றுகள் வெஸ்ட் இண்டீஸில் ஜூன் 19 முதல் தொடங்குகின்றன. தற்போது வரை இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா ஆகிய 6 நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் மேலும் 2 இடங்களுக்கான போட்டி கடுமையாக நடந்துவருகிறது.
இந்நிலையில் இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்த தொடக்க வீரர் சுப்மன் கில் மற்றும் வேகபந்து வீச்சாளர்கள் ஆவேஷ் கான் ஆகியோர் அணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்; அதாவது அடுத்ததாக நடைபெற இருக்கும் சூப்பர் 8 போட்டிகளில் பங்கேற்கமாட்டார்கள் என்ற தகவலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதனால் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டிருந்த நான்கு வீரர்களில் பினிஷர் ரிங்கு சிங் மற்றும் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது ஆகியோரை மட்டும் வெஸ்ட் இண்டீஸ்க்கு அழைத்து செல்வதாக அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோரை அணியில் இருந்து விடுவித்தது குறித்து பிசிசிஐ நிர்வாகம் கூறியபோது், 'அமெரிக்காவில் குரூப் லீக் சுற்றுகள் வரை மட்டுமே தங்கியிருக்க வேண்டும் என்பது முன்கூட்டியே எடுக்கப்பட்ட முடிவு என்பதால், இந்தியா மற்றும் கனடா போட்டிக்கு பிறகு அவர்கள் அணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள்,' என்று தெரிவித்திருந்தது.
மேலும், 'தற்போது ரோஹித் ஷர்மா அல்லது விராட் கோலிக்கு காயம் ஏற்பட்டால் ஏற்கனவே 15 பேர் கொண்ட அணியில் மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கலாம். எனவே டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்றில் நான்காவது தொடக்க ஆட்டக்காரர் தேவைப்படவிருக்கும் சூழ்நிலை இருக்காது' எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
'சுப்மன் கில் நியூயார்க்கில் வலைப்பயிற்சியில் அதிக நேரம் செலவழிக்கவில்லை எனவும் மேலும் ரிங்கு சிங் வலைப்பயிற்சியில் அதிக நேரம் செலவு செய்கிறார். மிடில் ஆர்டர் மற்றும் பினிஷர் இடங்களில் விளையாடும் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு பதிலாக ரிங்கு சிங் களமிறங்கக் கூடும்.மேலும் ரிங்கு சிங் இடது கை பேட்ஸ்மேனாக இருப்பதால் ஷிவம் துபேக்கு மாற்றாக இருக்கிறார்.அடுத்ததாக இந்திய அணியில் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் கூடுதலாக ஹர்திக் பாண்டியா,ஷிவம் துபேவும் உள்ள நிலையில் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர்களின் தேவை இருக்காது' என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படிங்க: ஐந்தே ஓவர்களில் முடிந்த மேட்ச்.. உகாண்டாவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!