டெல்லி: 9வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற இருக்கிறது. நடப்பு சீசனில் 20 அணிகள் பங்கேற்க உள்ள நிலையில் நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் சுற்றுகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளன.
இதில் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா ஆகிய ஐந்து அணிகள் உள்ளன. அதேபோல் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து. ஓமன் ஆகிய அணிகள் விளையாடுகின்றன. குருப் சி பிரிவில் நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், பாபுவா நியூ கினியா, உகாண்டா ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
அதேபோல் குருப் டி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபாளம் ஆகிய அணிகள் உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் வரும் ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்துடன் நியூயார்க் நகரில் மோதுகிறது. தொடர்ந்து இந்தியா அணி பாகிஸ்தானை ஜூன் 9 ஆம் தேதி நியூயார்க்கில் எதிர்கொள்கிறது.
இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் ஸ்பானர்ஷிப்பை அடிடாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் இந்திய ஜெர்சி அறிமுகப்படுத்தப்பட்டது.
மைதானத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, மற்றும் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஆகியோர் நின்று கொண்டு இருக்க ராட்சத ஜெர்சியை தூக்கிக் கொண்டு ஹெலிகாப்டர் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய அணியின் ஜெர்சியில் இரண்டு கை பகுதியிலும் காவி வர்ணம் உள்ளது.
இந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அடிடாஸ் நிறுவனம் ஒரே நாடு ஒரே ஜெர்சி என பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் இந்திய அணியின் ஜெர்சியிலும் காவி நிறத்தை கொண்டு வரப்பட்டதா என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு! பிளே ஆப் வாய்ப்பில் தொடருமா ஐதராபாத்? - Ipl 2024 MI Vs SRH Match Highlights