சென்னை : இந்திய பாரா விளையாட்டு வீராங்கனை சுவர்னா ராஜ், இண்டிகோ விமானத்தில் பயணித்த போது தனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம் குறித்து தெரிவித்து உள்ளார். அண்மையில் டெல்லியில் இருந்து சென்னை நோக்கி சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த போது தனது தனிப்பட்ட வீல்சேரை தன்னுடன் வைத்துக் கொள்ள அனுமதிக்குமாறு கேட்ட போது தனது கோரிக்கைக்கு பதிலளிக்காமல் விமான நிறுவன ஊழியர்கள் புறக்கணித்ததாக அவர் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், விமானத்தின் கதவு அருகே தனது தனிப்பட வீல்சேரை வைக்கும்படி பத்து முறைக்கும் மேல் தான் கோரிய போதும் அதை விமான நிறுவன ஊழியர்கள் காது கொடுத்தும் கேட்கவில்லை என்றும் தனது கோரிக்கையை விமான ஊழியர்கள் அலட்சியமாக புறக்கணித்ததாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
மேலும், ஒவ்வொரு முறையும் விமான பயணித்தின் போது இந்த கசப்பான அனுபவத்தை தான் எதிர்கொள்வதாகவும், 10ல் ஒன்பது முறை விமான பயணத்தின் போது தனது வீல்சேரை எடுத்து வருவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழலுக்கு தான் தள்ளப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், குறிப்பிட்ட பயணத்திற்கு முன்னதாக தன்னை மூன்று மேலாளர்கள் வந்து சந்தித்ததாகவும், தங்களுக்கு என பிரத்யேக வீல்சேர் வழங்கும் கொள்கையை தாங்கள் கொண்டு இருப்பதாக தெரிவித்ததாகவும் ஆனால் ஏன் அவர்கள் தனக்கு பயணத்தின் போது வழங்கவில்லை என தெரியாது என்றும் ஆதங்கத்தை தெரிவித்து உள்ளார்.
மேலும், இதே போன்றதொரு சம்பவம் தனது தோழிக்கும் நிகழ்ந்ததாகவும், மாற்றுத்திறனாளியான அவரை விமான பாதுகாப்பு சோதனையில் போது மூன்று முறை நிற்க வைத்ததாகவும் சுர்வர்னா ராஜ் தெரிவித்து உள்ளார். நாட்டுக்காக விளையாடி வரும் தங்களை போன்ற பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளால் என்ன நடந்துவிட போகிறது என்றும், இனி இது போன்று மற்ற வீரர், வீராங்கனைகளுக்கு நடக்காத வகையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுவர்னா ராஜ் குறிப்பிட்டு உள்ளார்.
அதேநேரம், சுவர்னா ராஜ் புகாருக்கு, இண்டிகோ விமான நிறுவனம் தரப்பில், அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், அனைவருக்குமான விமான நிறுவனமாக இருக்க அர்ப்பணிப்புடன் செயல்பட விரும்புவதாகவும், பாரா விளையாட்டு வீராங்கனை சுவர்னா ராஜுடன் தொடர்பு கொண்டு இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுவர்னா ராஜூக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுக்கு வருந்துவதாகவும், வாடிக்கையாளர்கள் உயர்தர அனுபவங்களையே வழங்க தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாகவும் இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்..! இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் விளாசி சாதனை..!