ஹைதராபாத்: இந்திய ஹாக்கி அணியின் தோனி என்று அழைக்கப்படும் ஸ்ரீஜேஷ், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இது குறித்து ஸ்ரீஜேஷ் கூறுகையில்,"தமிழ்நாடு ஹாக்கி யூனிட்டிற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோன். 2006 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலிருந்தே என்னுடைய ஹாக்கி பயணம் தொடங்கியது. இப்போது பள்ளிகளில் கூட ஹாக்கி விளையாட்டு துவங்கி உள்ளது. இதன் மூலம் நிறைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று உள்ளோம், அதனை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது" என தெரிவித்தார்.
2011-13 காலகட்டத்தில் தமிழ்நாடு அணிக்காக பல்வேறு ஹாக்கி போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்த காலகட்டத்தில் ஆசிய போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீஜேஷ்க்கு தமிழ்நாடு அரசு பரிசுத்தொகை வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளது
கார்ட் ஆஃப் ஹானர்: பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் ஸ்பெயினை 2-1 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. முன்னதாக ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெறப்போவதாக பி.ஆர்.ஸ்ரீஜேஷ் (PR Sreejesh) ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
அதன்படி அவர், வெண்கலப் பதக்கம் வென்ற கையோடு ஓய்வு பெற்றார். பதக்கம் வென்றபோது மனமகிழ்ந்து மைதானத்திலேயே படுத்து அழுத ஸ்ரீஜேஷை, அணியின் சக வீரர்கள் கட்டியணைத்து ஊக்கப்படுத்தினர். மேலும் அவருக்கு கட் ஆஃப் ஹானர் (Guard Of Honour) மரியாதை அளித்து வழியனுப்பி வைத்தனர்.
ஸ்ரீஜேஷின் ஹாக்கி பயணம்: கேரளாவைச் சேர்ந்த 2006 ஆம் ஆண்டு தெற்காசியப் போட்டிகளில் சீனியர் அணிக்காக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு இந்தியா அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
எதிரணிகளின் கோல் அடிக்கும் முயற்சியை தவிடுபொடியாக்கும் இவரின் அசாத்திய திறமையைக் கண்டு 2016 ஆம் ஆண்டு இந்திய ஹாக்கி அணியை வழிநடத்தும் கேப்டன் பொறுப்பை பெற்றார். அதே ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணியைக் கால் இறுதி சுற்று வரை அழைத்து வந்தார். இறுதி போட்டிக்கு செல்ல முடியாத வருத்தத்தில் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார்.
ஆனால் அதனை தொடர்ந்து நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும், தற்போது நடைபெற்ற பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி பதக்கம் வெல்ல முக்கிய பங்காற்றியுள்ளார். ஸ்ரீஜேஷ் திறமையைப் பாராட்டி இந்திய அரசு 2017ம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. அதுமட்டுமல்லாமல் 2021ம் ஆண்டு விளையாட்டுத்துறையில் சாதித்த வீரருக்கு வழங்கப்படும் உயரிய விருதான கேல்ரத்னா விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "நீரஜ் மட்டும்மல்ல தங்கம் வென்ற அர்ஷத்தும் என் மகன்தான்" - நீரஜ் சோப்ராவின் தாய் நெகிழ்ச்சி!