ஹைதராபாத்: ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5 போட்டிகள் அடங்கிய டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 3 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இத்தொடரில் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட அணியின் மூத்த வீரர்களுக்கு ஒய்வு அளிக்கப்பட்டு யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், ரியான் பராக், அபிஷேக் சர்மா, துஷார் தேஷ்பாண்டே உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுப்பயணம்: இந்த தொடர் நிறைவடைந்த பிறகு இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இலங்கை சுற்றுப்பயணத்தில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதற்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று டி20 போட்டிகள்: அதன்படி 3 போட்டிகள் அடங்கிய டி20 தொடரின் முதல் போட்டி ஜூலை 26ஆம் தேதி பாலக்காலேவில் நடைப்பெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது டி20 போட்டி ஜூலை 27ஆம் தேதியும், கடைசி டி20 போட்டி ஜூலை 29ஆம் தேதியும் பாலக்காலே மைதானத்திலேயே நடைபெற இருக்கின்றன.
🚨 NEWS 🚨
— BCCI (@BCCI) July 11, 2024
Fixtures for the upcoming India tour of Sri Lanka announced! 📢#TeamIndia | #SLvIND pic.twitter.com/oBCZn0PlmK
மூன்று ஒருநாள் போட்டிகள்: இதனைத் தொடர்ந்து, 50 ஓவர் ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் ஒருநாள் போட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்கவுள்ளது. இப்போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து ஆகஸ்ட் 4ஆம் தேதி இரண்டாவது ஒருநாள் போட்டியும், ஆகஸ்ட் 7ஆம் தேதி கடைசி ஒருநாள் போட்டியும் அதே கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது.
புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீர்: இந்திய அணியின் புதிய பயிற்சியாளராகக் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின், இந்திய அணி பங்கேற்க உள்ள முதல் தொடர் இதுவாகும். இதனால் ரசிகர்கள் மத்தியில் இத்தொடரின் மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து நட்சத்திர பேட்டர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்ற நிலையில் இத்தொடரில் இளம் வீரர்களுக்கு அதிகமாக வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தொடரில் விளையாடும் இந்திய அணியை டி20 போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் போட்டிகளில் கே.எல் ராகுலும் வழிநடத்துவார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் விபரம் அடுத்த வாரம் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை வீழ்த்தி நெல்லை ராயல் கிங்ஸ் அபார வெற்றி!