டெல்லி: பாரீஸ் பாராலிம்பிக்ஸ் தொடர் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 8ஆம் தேதி வரை பிரான்சில் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் 84 வீரர்கள் 12 விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர். இதுவரை இல்லாத அளவாக இந்தியா சார்பில் 84 பேர் பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் கலந்து கொள்கின்றனர்.
இது குறித்து பேசிய இந்திய பாராலிம்பிக்ஸ் கமிட்டி தலைவர் தேவேந்திர ஜஜார்ஜியா, பாரீஸ் பாராலிம்பிக்ஸ் விளையாட்டு தொடரில் இந்திய அணி 25 பதக்கங்களை கைப்பற்றும் என்று கூறினார். இந்திய வீரர், வீராங்கனைகளை உன்னிப்பாக கவனித்ததன் மூலம் குறைந்தபட்சம் 25 பதக்கங்களை வெல்வோம் என்ற முடிவுக்கு வந்ததாக தெரிவித்தார்.
பயிற்சியின் போது இந்திய வீரர் வீராங்கனைகளின் உத்வேகத்தை நேரில் கண்டதாகவும் இதுவரை இல்லாத வகையில் பாரீஸ் பாராலிம்பிக்கில் இந்திய அணி சாதனை படைக்கும் என்று தெரிவித்தார். இந்திய அணியில் பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் இடம் பெறாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்.
கடந்த டோக்கியோ பாராலிம்பிக்ஸ் தொடரில் இந்திய அணி 5 தங்கம் உள்பட 19 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்தமாக புள்ளிப் பட்டியலில் 24வது இடத்தை பிடித்தது. இந்நிலையில், இந்த முறை பாரீஸ் பாராலிம்பிக்கில் இந்திய அணி 25 பதக்கங்களை வென்று டாப் 20 இடங்களுக்குள் நுழையும் என்றும் அவர் தெரிவித்தார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா சார்பில் 56 வீரர், வீராங்கனைகள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், பாரீஸ் பாராலிம்பிக்கில் 84 பேர் கலந்து கொண்டுள்ளதாகவும், கண் பார்வையற்றவர்களுக்கான ஜூடோ, பாரா படகு போட்டி, பாரா சைக்கிளிங் போன்ற விளையாட்டுகளில் முதல் முறையாக இந்திய வீரர்கள் களம் காணுவதால் பதக்க வாய்ப்பு அதிகரித்து இருப்பதாகவும் தேவேந்திர ஜஜாரியா தெரிவித்தார்.
இதையும் படிங்க: அட்ராசக்க.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா? சிக்சரில் மிரட்டும் டிராவிட் மகன்! - Rahul Dravid son Samit viral video