கொழும்பு: இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-க்கு 0 என்ற கணக்கில் முழுவதுமாக கைப்பற்றி இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பிவில் இன்று (ஆக.2) நடைபெறுகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கி உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் பட்சத்தில் புதிய வரலாற்று சாதனையை இந்திய அணி படைக்கும்.
அதாவது, இலங்கை அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அது இந்திய அணிக்கு 100வது வெற்றியாகும். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக 100 வெற்றிகளை பெற்ற ஒரே மற்றும் முதல் அணி என்ற சாதனையை இந்திய வீரர்கள் படைப்பார்கள்.
இலங்கை அணிக்கு எதிராக 168 ஆட்டங்களில் விளையாடி 99 வெற்றிகளை இந்தியா இதுவரை பெற்று உள்ளது. இந்தியாவுக்கு அடுத்த படியாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிக்கு எதிராக 142 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடி 96 வெற்றிகளை பதிவு செய்து உள்ளது. இன்றைய ஆட்டத்தில் மட்டும் இந்திய அணி வெற்றி பெற்றால் அது வரலாற்று சாதனையாக அமையும்.
அணிகள் மற்ற அணிகளுக்கு எதிராக பெற்ற வெற்றிகள் வருமாறு:
இந்தியா – 99 vs இலங்கை
ஆஸ்திரேலியா - 96 vs நியூசிலாந்து
பாகிஸ்தான் – 93 vs இலங்கை
ஆஸ்திரேலியா - 88 vs இங்கிலாந்து
ஆஸ்திரேலியா – 84 vs இந்தியா
கடைசியாக 2023ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா விளையாடியாது. 2023 ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்று ஆசிய கோப்பையை கைப்பற்றி இருந்தது. அதன்பின் இன்றைய ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா மீண்டும் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.
இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி 152 ரன்கள் குவித்தால், சச்சின் தெண்டுல்கரின் நீண்ட கால சாதனையை முறியடிப்பார். இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி 152 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகவேகமாக 14 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சச்சின் சாதனையை முறியடித்து புது வரலாறு படைப்பார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்கரா ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண்கள் குத்துச்சண்டை பிரிவில் விளையாடியது ஆணா? - ஒலிம்பிக்கில் வெடித்த பாலின சர்ச்சை! - paris olympics 2024