ராஜ்கோட்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. ஆட்ட நாயகன் பட்டத்தை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா பெற்றுள்ளார்.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரை விளையாடி வருகின்றது. ஏற்கனவே இவ்விரு அணிக்களுக்கு இடையே 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று இரு அணிகளும் தலா 1 வெற்றிகளுடன் கடந்த 15ஆம் தேதி 3-ஆவது டெஸ்ட் போட்டியை எதிர்கொண்டனர்.
முதல் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸை விளையாடியது. இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் இந்திய அணியை சற்று தடுமாற வைத்தார். அதன் விளைவாக இந்திய அணி 3 விக்கெட்களை இழந்தது.
தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 10, சுப்மன் கில் 0 மற்றும் ராஜட் பட்டிதர் 5 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஆனால் ரோகித் சர்மா - ஜடேஜா கூட்டணி இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை திறன்பட கையாண்டு அணிக்கு ரன்களை சேர்த்தனர்.
இதன் மூலம் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியால் 445 ரன்கள் எடுக்க முடிந்தது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் 153 ரன்கள் விளாசினார். ஆனால் சக வீரர்கள் சொர்ப்ப ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
இரண்டாவது இன்னிங்ஸ்: 126 ரன்கள் என்ற நல்ல முன்னிலையுடன் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. முதல் இன்னிங்ஸில் ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா செய்ததை 2வது இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சுப்மன் கில், சஃப்ராஸ் கானுடனான கூட்டணியில் செய்து காட்டினார்.
சதத்தை நோக்கி நெருங்கிய சுப்மன் கில் 91 ரன்களின் போது எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். ஆனால் ஜெய்ஸ்வால் சதம், இரட்டை சதம் என 214 ரன்கள் விளாசி அசத்தினார். மறுமுன்னையிலோ சஃப்ராஸ் கான் 3 சிக்சர்கள், 6 ஃபோர்கள் உட்பட 68 ரன்கள் விளாசியிருந்தார். இதனால் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 430 ரன்கள் எடுத்து 556 ரன்கள் முன்னிலையில் இருந்த போது இந்திய அணி டிக்லர் செய்தது.
பின்னர் 557 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களம் கண்டது இங்கிலாந்து அணி. மார்க் வுட்டை தவிர்த்து எவரும் 20 ரன்கள் தாண்டவில்லை. ஜடேஜாவின் சுழலுக்கு இங்கிலாந்து அணியின் வீரர்கள் இறையாகினர். 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து ஒரு மோசமான தோல்வியை தழுவியது இங்கிலாந்து அணி.
இந்த தோல்வி அவர்களது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது பெரிய தோல்வியாகும். அதேபோல் கேப்டனாக டெஸ்ட் போட்டிகளில் பென் ஸ்டோக்ஸ் எதிர்கொள்ளும் இரண்டாவது தோல்வி. முன்னதாக 2023ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சஃப்ராஸ் கான்: ரஞ்சிக்கோப்பையில் தனது திறனை வெளிப்படுத்தி வந்த சஃப்ராஸ் கானுக்கு இந்த போட்டியில் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இதற்காக நீண்ட நாள் காத்திருந்ததாக முதல் இன்னிங்ஸில் முடிவில் சஃப்ராஸ் கான் தெரிவித்திருந்தார்.
முதல் இன்னிங்ஸில் சஃப்ராஸ் கான் களம் இறங்கும் போது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வாரா? என்ற கேள்வி அனைவரின் மனதில் இருந்திருக்க கூடும். கேப்டன் ரோகித் சர்மா 131 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறிய போது சஃப்ராஸ் களத்திற்கு வந்தார். கிட்டதட்ட ஒடிஐ கிரிக்கெட்டை போல ஆட்டத்தை கையாண்டார்.
48 பந்துகளில் அரைசதம் அடித்த அவர் 62 ரன்களில் இருந்த போது ஜடேஜாவின் ராங் காலின் (Wrong Call) மூலம் ரன் அவுட் ஆனார். இருப்பினும் தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் களத்தை விட்டு சென்றிருந்தார். அதே போல் இரண்டாவது இன்னிங்ஸிலும் 72 பந்துகளில் 68* ரன்கள் சேர்த்திருந்தார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் சாதனை: டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது இரட்டை சதத்தை அடித்துள்ளார் ஜெய்ஸ்வால். அந்த இரண்டுமே இங்கிலாந்துக்கு எதிரான இந்த தொடரில் நிகழ்ந்திருப்பது கூடுதல் சிறப்பு. ஆம் இந்த இரண்டு இரட்டை சதத்தின் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் இரண்டு இரட்டை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதேபோல் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற பாகிஸ்தான் வீரர் வாஷிம் அக்ரமின் சாதனையை இந்த போட்டியின் மூலம் ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டநாயகன் ரவீந்திர ஜடேஜா: இந்தியாவின் இக்கட்டான சூழ்நிலைகளின் பல நேரங்களில் ஜடேஜா இந்திய அணியை மீட்டுள்ளார். இந்த போட்டியிலும் அதை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். 3 விக்கெட்கள் இழந்து முதல் இன்னிங்ஸில் இந்திய அணி தடுமாறிய போது ரோகித் சர்மாவுடன் தனது நிதான ஆட்டத்தின் மூலம் சதம் அடித்து இந்திய அணியை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்டார்.
அதேநேரம் பந்து வீச்சில் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் ஹால்கள் என இங்கிலாந்து அணியின் பேட்டர்களை தனது சுழலிற்கு இறையாக்கி இந்த ஆட்டநாயகன் விருதை ஜடேஜா பெற்றுள்ளார்.
இந்திய அணியின் சாதனை: இந்திய அணி தனது அபார செயல்திறன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் தன்வசம் ஆக்கியுள்ளது.
இந்த இமாலய வெற்றியின் மூலம் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டியாக இந்த போட்டி மாறியுள்ளது. இதற்கு முன்னதாக 2021ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக் ப்ராக்டர் காலமானார்!