பார்படாஸ் (வெஸ்ட் இண்டீஸ்): டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்தியா, ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியா தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுமையாக ஆடினர். முதல் ஓவரில் பவுண்டரி அடித்த கேப்டன் ரோகித் சர்மா, 2வது ஓவரில் ஃபருகி பந்தில் 8 ரன்களுக்கு அவுட்டானார். பின்னர் 3வது வீரராக களமிறங்கிய பண்ட், அதிரடியாக ஆடினார். நபி வீசிய இன்னிங்ஸின் 5வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து மிரட்டினார்.
ஆனால், இதற்கடுத்த ஓவரில் ரஷித் கான் பந்தில் பண்ட், 20 ரன்களுக்கு எல்பிடபுள்யூ முறையில் அவுட்டானார். இதனைதொடர்ந்து கோலியும், ரஷித் கான் பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று நபி யிடம் கேட்ச் கொடுத்து 24 ரன்களுக்கு அவுட்டானார்.
பின்னர் வந்த ஷிவம் தூபே 10 ரன்களுக்கு நடையை கட்ட, இந்திய பேட்டிங் 90 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து ஆட்டம் கண்டது. இதனையடுத்து சூர்யகுமார், பாண்டியா ஜோடி அணியை மீட்கும் முயற்சியில் களமிறங்கியது. பாண்டியா சற்று பொறுமையாக விளையாட, சூர்யகுமார் யாதவ் வேகமாக ரன்கள் சேர்த்தார்.
ஆஃப்கனிஸ்தான் பந்துவீச்சில் சிக்சர்களாக பறக்கவிட்ட சூர்யகுமார், ஃபசல் ஹக் பந்தில் 53 ரன்களுக்கு அவுட்டானார். மறுபக்கம் பாண்டியா 32 ரன்களுக்கு நவீன் உல் ஹக் பந்தில் அவுட்டானார். அடுத்து வந்த ஜடேஜா 7 ரன்களுக்கு அவுட்டாக, அக்சர் 12 ரன்கள் எடுத்து கடைசி நேரத்தில் ரன் கணக்கை உயர்த்த உதவினார். இந்தியா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
182 என்ற கடின இலக்கை விரட்டிய ஆஃப்கானிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் குர்பாஸ் (11), இப்ராஹிம் (8) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்து களமிறங்கிய சசாய் 2 ரன்களுக்கு அவுட்டானார். 4வது வீரராக களமிறங்கிய குல்பதீன் ஓரளவு அணியின் ரன்கள் கணக்கை உயர்த்தி அவுட்டானார்.
ஒமர்சாய் (26) மட்டும் நிலைத்து நின்று ஒரு முனையில் ரன்கள் சேர்க்க, மற்ற வீரர்கள் சத்ரான் (19), நபி (14), ரஷித் கான் (2) வந்த வேகத்தில் நடையை கட்டினர். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.
இதையும் படிங்க: "ஆளப்போறான் தமிழன்"- ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்கள்! யார் யார் தெரியுமா? - olympic 2024