ஐதராபாத்: மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று (அக்.9) துபாயில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தனர்.
இந்திய வீராங்கனைகள் ஷபாலி வர்மா (43 ரன்), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (52 ரன்), ஸ்மிரிதி மந்தனா (50 ரன்) ஆகியோர் அதிரடியாக விளையாடினர். தொடர்ந்து 173 ரன்களை துரத்தி விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீராங்கனைகள் கடும் மோசமாக சொதப்பினர். இதனால் அந்த அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
19.5 ஓவர்களில் இலங்கை 90 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய மகளிர் 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றனர். இந்திய அணியில் அதிகபட்சமாக அருந்ததி ரெட்டி, ஆஷா ஷோபனா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரைஇறுதி வாய்ப்பில் தொடர்ந்து நீடிக்கிறது.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணியின் ரன் ரேட் +0.576ஆக உயர்ந்தது. தொடர்ந்து குரூப் பிரிவில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. இருப்பினும் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய மகளிரை எதிர்கொள்கின்றனர். இந்த ஆட்டத்தில் இந்திய மகளிர் வெற்றி அல்லது தோல்வி கண்டால் அது போட்டியில் எவ்வாறு பிரதபலிப்பை உருவாக்கும் என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
ஆஸ்திரேலியாவை வென்றால்:
குரூப் பிரிவின் கடைசி ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தினாலும் அரைஇறுதி வாய்ப்பு என்பது உறுதியாகாது. ஒருவேளை இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றால், புள்ளிப் பட்டியலில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய மூன்று அணிகளும் தலா 4 ஆட்டங்களில் மூன்று வெற்றியுடன் 6 புள்ளிகளிம் இருக்கும்.
ரன் ரேட் அடிப்படையில் அடுத்த சுற்றுக்கான அணி தேர்வு செய்யப்படும் சூழல் நிலவும் நிலையில், இந்திய அணி நியூசிலாந்தை விட ரன் ரேட்டில் முன்னிலையில் இருப்பதால் அதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற முடியும் என கணிக்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியா வென்றால்..:
ஒருவேளை ஆஸ்திரேலிய மகளிர் அணி வெற்றி பெற்றால் நிலைமை சற்று சிக்கலாகும். ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று நேரடியாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். அதேநேரம் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேற வேண்டுமானால், ஆஸ்திரேலியா பாகிஸ்தானை தோற்கடிக்க வேண்டும்.
அதேநேரத்தில் நியூசிலாந்து அணி கடைசி இரண்டு ஆட்டங்களில் இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்தபட்சம் ஒன்றில் தோல்வியடைய வேண்டும். இப்படி நடக்கும் நிலையில், இந்திய மகளிர் அணிக்கு வாய்ப்பு இருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணி ரன் ரேட்டில் இந்தியாவை விட சற்று குறைவாக காணப்படுவதால் அதன் மூலம் இந்திய மகளிர் அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.
இதையும் படிங்க: கிரிக்கெட்டை நிராகரித்த ரத்தன் டாடா! இது தான் காரணமா? Reason for Ratan Tata decline cricket!