சென்னை: சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் ஆகஸ்ட் 31-ல் தொடங்க இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கு பெறும் இந்த கார் பந்தயத்தில் 32 வீரர்கள் பங்கு பெற இருக்கின்றன.
5 சுற்றுகள் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் முதல் சுற்று ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டையிலும், இரண்டாவது சுற்று சென்னையிலும், மூன்றாவது சுற்று கோயம்புத்தூரிலும், நான்காவது சுற்று கோவாவிலும், ஐந்தாவது சுற்று கொல்கத்தாவிலும் நடைபெற இருக்கிறது. இந்த ஐந்து சுற்றுகளின் முடிவில், அதிக புள்ளிகளைப் பெறும் அணியினர் சாம்பியன் பட்டத்தை பெறுவார்கள்.
இந்நிலையில், கடந்த 18 வருடமாக ஃபார்முலா கார் பந்தயத்தில் முத்திரை பதித்து வருபவரும், தற்போது ஃபார்முலா 4 பந்தயத்தில் சென்னை அணி சார்பில் பங்கேற்கும் சேத்தன் கொராடா ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
அதில், "நான் பிறக்கும்போது கால் பாதங்கள் சரிவர இயங்காத நிலையில் இருந்தது. நான் மூன்று வயதில் இருக்கும் பொழுது என்னுடைய இரு கால்களையும் எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்ததால், கடின மனதுடன் என் பெற்றோர் சம்மதித்தனர். இரு கால்களும் எடுக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் வீல் சேரில் பயணிக்க வேண்டிய சூழலில் இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், தொழில்நுட்ப உதவியுடன் தற்போது கார்பனால் செய்யப்பட்ட செயற்கை கால் பொருத்தப்பட்டு ஃபார்முலா கார் பந்தயங்களில் பங்குபெறும் அளவிற்கு என்னை தயார்படுத்திக் கொண்டேன். இதுவரை 250க்கும் மேற்பட்ட கார் பந்தயங்களில் பங்கேற்றுள்ளேன். அது எனக்கு பல்வேறு அனுபவங்களை பெற்றுக் கொடுத்தது.
மேலும், நான் கடந்த 2017ஆம் ஆண்டு ஃபார்முலா 16, கடந்த 2019ஆம் ஆண்டு ஃபார்முலா 13 ஆகிய போட்டிகளில் மூன்றாவது இடமும், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற எம்ஆர்எப் தொடரில் மூன்றாவது இடமும் பிடித்துள்ளேன்.
சென்னையில் நடைபெறும் ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு சென்னை அணியினர் என்னை தேர்வு செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னையில் சுற்றித்திரிந்த இடத்தில் கார் பந்தயத்தில் செல்ல இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விதமாக உள்ளது.
ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால் எந்த வித அச்சமின்றி போட்டியில் பங்கேற்கிறேன். கார் பந்தயம் விளையாடுவதற்கு என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் பெரும் ஆதரவு கொடுத்தனர்.
சிறுவயதில் இருந்தே விளையாட்டில் அதிக ஆர்வம் உள்ளது. பள்ளி, கல்லூரி காலங்களில் டென்னிஸ், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுக்களை ஆர்வத்துடன் பங்கேற்று விளையாடியதால், கார் பந்தய விளையாட்டை தேர்வு செய்ய முடிவு செய்த போது, அந்த விளையாட்டிலும் சாதிக்க முடியும் என என்னுடைய குடும்பத்தினர் நம்பி ஆதரவு கொடுத்தனர்.
செயற்கை கால்களால் போட்டியில் பங்கேற்க முடியுமா? முறையான பயிற்சியை அதிக ஆண்டுகள் எடுத்திருக்கிறேன். அதே போல இதற்கான பாதுகாப்பு விதிகளை முறையாக தேர்ச்சி பெற்றிருப்பதால், இதில் பங்கேற்க முடிகிறது.
கார் பந்தயத்தில் பங்கேற்றபோது விபத்து ஏற்பட்டுள்ளதா? கார் பந்தயத்திற்கு என பாதுகாப்பு விதிகள் உள்ளது. அந்த விதியை சரியாக பின்பற்றினால் தான் கார் பந்தயத்தில் பங்கேற்க முடியும். உதாரணமாக, ஒரு கார் பந்தயத்தின் போது விபத்து ஆனவுடன் 6 வினாடிக்குள் காரில் இருந்து வெளியேறிச் செல்ல வேண்டும் என்பது விதியாக இருக்கிறது.
எனக்கு செயற்கை கால் பொருத்தி இருப்பதால், காரில் எந்த மாற்றமும் செய்யாமல், மற்றவர்கள் பயன்படுத்துவது போலவே நானும் ரேஸ் காரை பயன்படுத்தி வருகிறேன். ஃபார்முலா கார்களை அதிகளவு பயன்படுத்தி பந்தயங்களில் பங்கேற்றுள்ளதால் ஃபார்முலா 4 காரை தைரியமாக ஓட்ட முடிகிறது.
முறையான பயிற்சியும், முறையாக வாகனத்தை இயக்குவதாலும் விபத்து ஏற்படுத்தியது இல்லை. நான் ரேசில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியிலும் எனக்கும், ரேசில் பங்கேற்கும் மற்றவர்களுக்கும் எந்த விபத்தும் ஏற்படுத்தக் கூடாது.
ஆனால், கார் ரேஸில் விபத்து நடப்பது என்பது இயல்பான ஒன்றாக உள்ளது. முதல் இடத்துக்கு வர வேண்டும் என காரை இயக்கும் போது ஒரு போட்டியாளரை மற்றொரு போட்டியாளர் முந்திச் செல்ல முயலும் போது விபத்து ஏற்படுவது கார் ரேஸில் இயல்பு. இரண்டு கால்களுமே இல்லை என்றாலும் கூட முறையான பயிற்சியும், மன உறுதியும் இருந்தால் எதையும் செய்யலாம்" என பேசினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : நாளை சீறிப்பாய காத்திருக்கும் அழகிய அசுரன்.. ஃபார்முலா 4 கார் பந்தயம் பற்றி அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை! - Chennai Formula 4 race car speed