ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணி என்றாலே காலங்காலமாக உலகத்தரம் வாய்ந்த பேட்டர்களை உற்பத்தி செய்வது வழக்கம். ஆனால் இந்த கருத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே உடைத்துள்ளார்.
இந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்திய டி20 உலகக்கோப்பையில் கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக பராஸ் மாம்ப்ரே செயல்பட்டார். அவர் ஈடிவி பாரத் ஊடகத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
அதில் அவர், "இந்திய அணியின் வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சில் பலமான கூட்டணியை உருவாக்குவதே தனது நோக்கமாக இருந்ததாகவும், இதன்படி தற்போது இந்திய அணிக்காக விளையாடி வரும் பந்து வீச்சாளர்களை பொறுத்தமட்டில் அவேஷ் கான், கலீல் அகமது, அர்ஷ்தீப் சிங் ஆகியோரும், முகமது ஷமி, இஷாந்த் சர்மா மற்றும் உமேஷ் யாதவ் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா என அனுபவம் வாய்ந்த வீரர்களும் உள்ளனர் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் புதிய இளம் பந்து வீச்சாளர்களான மயங்க் யாதவ், மொசின் கான், ஹர்ஷித் ராணா, குல்தீப் சென் ஆகியோரும் அணியில் இனணந்திருப்பதால் இந்திய அணி வலிமையான பந்துவீச்சு கூட்டணியை அமைத்திருப்பதாக தெரிவித்தார்.
இனிவரும் போட்டிகளில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து போட்டியின்போது கடினமான தருணங்களில் அவர்களை விளையாட வைத்து அவர்களின் திறமையை வெளிப்படுத்த அனுமதி வழங்க வேண்டும்" என்று மாம்ப்ரே தெரிவித்தார்.
2024 டி20 உலகக் கோப்பை வெற்றி பற்றி: இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து ஓய்வு பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக மாம்ப்ரே தெரிவித்தார். ஒரு பயிற்சியாளராக உலகக்கோப்பையை வென்றது சிறப்பு தான். இருப்பினும் இந்திய அணியின் பயிற்சியாளராக தான் இருந்த முழு பயணமும் சிறப்பாக அமைந்ததாக தெரிவித்தார்.
அர்ஷ்தீப் சிங் பற்றி: 2024 டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி கோப்பையை வென்றதிற்கு அர்ஷ்தீப் சிங் முக்கிய பங்கு வகித்ததாக தெரிவித்தார். அர்ஷ்தீப் உடனான அறிமுகம் தமக்கு U-19 உலகக்கோப்பை அணியில் அவர் இருந்ததில் இருந்தே உள்ளதாகவும், பின்னர் அவர் தனது மாநிலத்திற்காக விளையாட சென்றதாகவும் மாம்ப்ரே தெரிவித்தார்.
மேலும் அர்ஷ்தீப் சிங் 52 டி20 போட்டிகளில் விளையாடி 79 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் காரணங்களை பகிர்ந்தார். அர்ஷ்தீப் போட்டியில் இரு நெருக்கடியான தருணங்களில் பந்து வீசுகிறார்.அதில் ஆட்டத்தின் ஆரம்ப ஓவர்களில் புதிய பந்தில் பந்து வீசுகிறார். பின்னர் டெத் ஓவர்களில் பந்து வீசுகிறார். அவருடைய எகானமி 8 புள்ளிகளை வைத்திருப்பது மிகவும் அற்புதமான ஒன்றாகும். அர்ஷ்தீப் சிங் வலைப்பயிற்சியில் ஈடுபடும்போதும், அவர் ஆடுகளத்திற்குள் விளையாடும்போதும் அவருடன் உரையாடுவதாகவும் மாம்ப்ரே தெரிவித்தார்.
"தற்போது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க விரும்புவதாகவும், இருப்பினும் கிரிக்கெட்டிற்கு தனது பங்களிப்பை தொடர்ந்து அளிக்க இருக்கிறேன்” என்றும் பராஸ் மாம்ப்ரே தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேசிய பாரா தடகளப்போட்டி.. 5 பதக்கங்களைக் குவித்த தூத்துக்குடி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!