ஹைதராபாத்: உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 33வது ஒலிம்பிக் திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 16 விளையாட்டுகளில் சுமார் 112 இந்திய வீரர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி, தமிழகத்தைச் சேர்ந்த ராஜேஷ் ரமேஷ், சந்தோஷ் தமிழரசன், பிரவின் சித்திரவேல், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகியோர் தடகள அணியில் இடம்பிடித்துள்ளனர்.
சர்வதேச விளையாட்டு திருவிழாவான இந்த போட்டியில் உலகம் முழுவதும் உள்ள 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், இந்தியாவின் அணிக்காக ஐந்து முறை ஒலிம்பிக் பங்கேற்பாளராக இருந்த சரத் கமல் தேசியக்கொடி ஏந்தி செல்வார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒலிம்பிக் தேசியக் கொடியை பி.வி.சிந்து ஏற்றி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய அணியின் ஒலிம்பிக் தலைவராக மேரி கோம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் தலைவராக செயல்படுவார் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு கரோனாவால் ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று 7 பதக்கம் வென்றது. இந்த முறை இரட்டை இலக்கத்தில் பதக்கம் வெல்ல வேண்டும் என குறிவைத்து இந்திய அணி ஆயத்தமாகி வருகிறது.
பிரதமர் மோடியுடன் சந்திப்பு: இந்த நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை கடந்த ஜூன் 5ஆம் தேதி சந்தித்து கலந்துரையாடினர். அப்போது பிரதமர் மோடி அவர்களை ஊக்கப்படுத்தி, போட்டிகளில் சிறப்பாக செயல்பட தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
முன்னேற்பாடு பணிகள் தீவிரம்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ம் தேதி நடைபெறவுள்ள போட்டிகளுக்கு முன்பாக கண்கவர் தொடக்க விழா நடைபெறவுள்ளது. இதில் வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பை படகுகளில் வைத்து நடத்த பிரான்ஸ் திட்டமிட்டு உள்ளது.
அதேபோல், தொடக்க விழாவின் முக்கிய அம்சமாக இடம்பெறுவது அணிவகுப்பில் பங்கேற்கும் ஒவ்வொரு நாட்டு வீரர், வீராங்கனைகள், தங்கள் நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் உடைகளை அணிந்துகொண்டு கம்பீரமாக வலம்வருவார்கள். இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் குர்தா, பைஜாமாக்கள் உடைகளை அணிந்து வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: இந்திய அணியை வழிநடத்தும் கவுதம் கம்பீர்.. இதுவரை செய்த சாதனைகள் என்ன?