ஐதராபாத்: கிரிக்கெட்டை பொறுத்தவரை அடிக்கடி புது சாதனைகள் படைக்கப்படுவதும் விரைவிலேயே அவை முறியடிக்கப்படுவதும் சர்வசாதாரணமாகி விட்டது. இதில் விதிவிலக்காக சிலரின் சாதனைகள் மட்டுமே எளிதில் எவ்வராலும் முறியடிக்க முடியாமலும், முறியடிக்க முடியாததாகவும் மாறி விடுகின்றன.
அப்படி சூப்பர் ஓவரில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் மெய்டன் ஓவராக பந்துவீசிய வீரர் குறித்து தான் இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கப் போகிறோம். 20 ஓவர் கிரிக்கெட்டில் தான் பெரும்பாலும் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படுகிறது. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி சமனில் முடியும் நிலையில், அதில் முடிவை கொண்டு வரும் பொருட்டு உருவாக்கப்பட்டது தான் சூப்பர் ஓவர்.
லிமிடெட் ஓவர் பார்மட்களில் மட்டுமே இந்த சூப்பர் ஓவர் விதி அமல்படுத்தப்படுகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் கொண்டு வர சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் விதிகள் அனுமதிப்பதில்லை. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படாத நிலையில், சூப்பர் ஓவர் மூலம் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுகின்றனர்.
கடந்த 2014ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் லீக் தொடரில் ரெட் ஸ்டீல் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணிகள் இடையிலான போட்டி யாருக்கும் வெற்றி தோல்வியின்றி சமனில் முடிந்தது. முதலில் பேட்டிங் செய்த ரெட் ஸ்டீல் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த கயானா வாரியர்ஸ் அணியும் 20 ஓவர்கள் 118 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது. இதில் முதலில் விளையாடிய கயானா வாரியர்ஸ் அணி 6 பந்துகளில் 11 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ரெட் ஸ்டீல் அணி வீரர்கள் களமிறங்கினர்.
சூப்பர் ஓவரை வீசிய கயானா வாரியர்ஸ் அணி வீரர் சுனில் நரேன், அந்த ஓவரில் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் 1 விக்கெட்டையும் வீழ்த்தினார். இதன் மூலம் சூப்பர் ஓவரையே மெய்டன் ஓவராக வீசிய முதல் வீரர் என்ற உலக சாதனையையும் சுனில் நரேன் படைத்தார். முன்னதாக அந்த போட்டியில் நரேன் 4 ஓவர்கள் பந்துவீசி 23 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தார்.
இதையும் படிங்க: சர்வதேச கிரிக்கெட்டில் தடை செய்யப்பட்ட டாப் வீரர்கள்! எத்தனை இந்திய வீரர்கள்!