டெல்லி: 17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (மே 7) அருண் ஜெட்லி மைதானத்தில் 56வது லீக் தொடர் நடைபெறுகிறது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, டெல்லி கேபிட்டல்ஸ் அணி தனது இன்னிங்ஸைத் தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க் அபிஷேக் போரல் ஜோடி களமிறங்க, முதல் ஓவரில் தனது முதல் பவுண்டரியை பதிவு செய்தார் மெக்குர்க்.
ஆவேஷ்கான் 3வது ஓவர் வீச, மெக்குர்க் ஓவர் முழுவதும் சிக்ஸ், பவுண்டரி என மாறி மாறி விளாசினார். 3வது ஓவரில் மட்டும் டெல்லி அணிக்கு 29 ரன்கள் கிடைத்தன. இதனிடேயே மெக்குர்க் தனது அரைசதத்தை பதிவு செய்தார். சிறப்பாக விளையாடிய மெக்குர்க் ஆட்டமிழக்க, பின்னர் களம் கண்ட சாய் ஹோப் சொற்ப ரன்னில் வெளியேறினார்.
அதன்பின், அக்சர் பட்டேல் களமிறங்க, டெல்லி அணி பவர் ப்ளே முடிவில் 78 - 2 என்ற கணக்கில் விளையாடியது. பின் அக்சர் பட்டேல் ஆட்டமிழக்க, அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய பந்தைச் சமாளிக்க முடியாமல் அபிஷேக் போரல் ஆட்டமிழந்தார். அதன்பின், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களம் கண்டார்.
இதனையடுத்து, வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்து ரிஷப் பண்ட் பெவிலியன் திரும்பிச் செல்ல, குல்பாடின் நைப் களம் கண்டு அணிக்கு ரன்களை குவிக்க, 18வது ஓவர் டெல்லி அணிக்கு திருப்பு முனையாக அமைந்தது. 18வது ஓவரில் மட்டும் டெல்லி அணிக்கு 21 ரன்கள் குவிந்தன. 20 ஓவர் முடிவிற்கு 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு டெல்லி அணி 221 ரன்களைக் குவித்தது.
இந்தப் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் அதிகபட்சமாக மெக்குர்க் 50 ரன்களும், அபிஷேக் போரல் 65 ரன்களும், ஸ்டப்ஸ் 41 ரன்களும் குவித்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அஷ்வின் 3 விக்கெட்டுகளும், போல்ட், சாஹல், சந்தீப் ஷர்மா ஆகிய 3 பேரும் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர்.
இதையும் படிங்க: டாஸ் வென்று ராஜஸ்தான் பந்துவீச்சு தேர்வு! டெல்லியின் பிளே ஆப் கனவு நிறைவேறுமா? - IPL 2024 DC Vs RR Match Highlights